அதிமுகவுடனான கூட்டணி முறிவு… பாஜகவின் அடுத்த கட்ட மூவ் இதுதான் ; சீமான் சொன்ன ரகசியம்…!!
Author: Babu Lakshmanan27 September 2023, 5:11 pm
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்காததற்கு கண்டனம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த சீமான் 118வது பிறந்த நாளை முன்னிட்டு சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழக முதல்வரை அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் தனிப்பட்ட முறையில் அவருக்காக தண்ணீர் கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக கேட்கிறார். காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைவரும் தமிழக முதல்வரின் பின் நிற்க வேண்டும்.
சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோரது படங்களுக்கு அவமரியாதை செய்ய எவ்வளவு நேரம் ஆகும். ஒரு நிமிடம் போதும் என ஆவேசமாக சீமான் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக மக்கள் அமைதியாக இருப்பது கோழைத்தனம் என நினைத்து விடாதீர்கள். கர்நாடகாவில் தமிழக முதல்வருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் மானுட அவமானம் என்றும் சீமான் தெரிவித்தார்.
தமிழகத்தில் தனித்துவிடப்பட்ட பாஜகவின் நிலை என்ன? என கேட்டதற்கு, பாஜக தமிழகத்தில் தனியே தேர்தலை சந்திக்காது, பாஜக தனக்கென ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கும். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் சிறப்பான முறையில் அனைத்து தரப்பு மக்களின் நன்மைக்காக கூட்டாட்சி தத்துவப்படி ஆட்சி செய்தவர் விபி சிங் தான்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த செயல் கண்டிக்கத்தக்கது, என்று சீமான் மேலும் தெரிவித்தார்.