சென்னை ; வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது இனவெறியின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தாயகத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் சிவன் இரவை முன்னிட்டு நீதிமன்றத்தில் அனுமதிபெற்று வழிபடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழர்களைத் தடுத்து, அவர்கள் மீது இலங்கை இனவாத அரசின் காவல்துறை கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஈழ நிலத்தில் 2 இலட்சம் அப்பாவி தமிழர்களைத் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்து முடித்த பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், இனத்துவேசமும் துளியும் அடங்காது இன அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது. அதன் நீட்சியாக, தமிழர் அடையாளச் சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும், தொன்மச்சான்றுகளையும் மெல்ல மெல்ல அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சிங்கள இனவாத அரசு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தைத் தகர்த்தது, தமிழர் வழிப்பாட்டுத்தலங்களை இடித்து பௌத்த விகார்களை நிறுவி வருவது, தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களைச் சிதைப்பது என தமிழர்கள் வாழ்விடங்கள் என்பதற்கான அடையாளங்கள் யாவற்றையும் முற்றாக அழிப்பதும், தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறித்து, சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர் பகுதிகளை இராணுவத்தின் துணையோடு சிங்களமயமாக்குவது இனப்படுகொலைப் போருக்கு பிந்தைய கடந்த 14 ஆண்டுக் காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக இத்தகைய கொடுமைகளைச் செய்து வருகிறது சிங்கள இனவாத அரசு.
அருகாமையிலிருக்கும் ஒரு நாட்டில் இத்தகைய இனவெறிக்கொடுமைகளும், பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும்போதும் இந்தியாவை ஆளக்கூடிய பாஜக அரசு அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாது அமைதிகாப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கும் பச்சைத்துரோகமாகும். பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் வாழும் இந்துக்களுக்குப் பாதிப்பு என்றால் பாய்ந்து பாதுகாக்க துடிக்கும் பாஜக அரசு, ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது ஏன் வாய்திறப்பதில்லை? குறைந்தபட்சம் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்களை இடிக்கும்போதாவது கண்டித்திருக்கலாமே? இன்றுவரை அதனைச் செய்யாது, சிங்கள – பௌத்த வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது இந்துத்துவ பாஜக அரசு.
‘தமிழர்கள்தான் இந்துக்கள்; இந்துக்கள்தான் தமிழர்கள்’என்று பொய்யுரைத்து வாக்கரசியல் செய்யும் பாஜக, சிங்கள இனவாதத்தால் தமிழர்களது வழிப்பாட்டுத்தலங்கள் தாக்குதலுக்குள்ளாகும்போதும், தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும்போதும், பாரிய இனப்படுகொலைக்கு ஆட்படுத்தப்படும்போதும் அமைதி காப்பதன் மூலம் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பாஜக உணர்த்திக்கொண்டிருக்கிறது.
அதனால்தான், முல்லைத்தீவில் நீராவியடியில் பிள்ளையார் கோயில் வளாகத்திற்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தபோதும், ஆதிசிவன் ஐயனார் கோயிலை இடித்து பெளத்த விகாரை நிறுவுகிறபோதும், இன்றைக்கு வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு தாக்குதல் நடத்தியுள்ளபோதும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறது.
ஆகவே, வழிபாட்டு உரிமையையும், வாழ்வதற்கான உரிமையையும் மறுத்து தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இலங்கையின் இனவாதக் கொடுமைகளை ஐ.நா. மன்றம் உள்ளிட்ட அமைதியை விரும்பும் பன்னாட்டு அமைப்புகள் உடனடியாகக் கண்டிப்பதோடு, தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வான ஈழத்தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்த முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.