நீங்க தரும் ரூ.1000த்தை வாங்க பிச்சைக்காரன் ஆகனுமா..? ஜெயலலிதா செய்ததை கூட கருணாநிதி செய்யல… திமுகவுக்கு தகுதியே கிடையாது ; சீமான்

Author: Babu Lakshmanan
8 July 2023, 11:54 am

ஒரு பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக தான் செந்தில் பாலாஜி விவகாரமும், ஆளுநர் பிரச்சனையும் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சீமான் தமிழ் தேசியக் கொள்கையை விடுத்தால் பாஜக கூட்டணிக்கு நாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது :- எச். ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுதான் எனது பதில். நட்பு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அவர் என்னை அழைப்பது எங்களது வளர்ச்சியை காட்டுகிறது.

தமிழ் தேசியம் தோற்றுவிடும் என்று திருமாவளவன் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ் தேசியம் குறித்து திருமாவளவன் அவர்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டோம். அவரது மாணவர்கள் நாங்கள். எப்போதும் ஆசிரியர்கள் ஓடி ஜெயிக்க முடியாது. பயிற்சி அளிக்கும் மாணவர்கள் தான் ஜெயிக்க முடியும். நாங்கள் ஜெயித்துக் காட்டுவோம் பொருத்து இருந்து பார்க்கட்டும்.

தமிழக அரசிடம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று தேர்தலுக்கு முன்பாக அறிவித்த அரசு..? ஏன் தற்போது விதிமுறைகளை விதிக்கிறது. அப்படி என்றால் பிச்சைக்காரனாக இருந்தால் தான் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நிலைக்கு அரசு தள்ளிவிட்டது. நல்லா இருந்தால் நாங்கள் ஏன் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை உங்களிடம் பெற போகிறோம்.

நகைக்கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று தேர்தலுக்கு முன்பு திமுக கூறியதை அடுத்து, பொதுமக்கள் தங்களுடைய நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து, தற்போது நகை கடன் தள்ளுபடி கிடைக்காமல், அவதியடைவது போன்று தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டமும்..

டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் காரணமாக தான் உயிரிழந்து உள்ளார். அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர், கடந்த ஆறு மாத காலமாக அவர் பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். 6 மாத விடுமுறை கேட்டார், கொடுக்கவில்லை. அந்த அழுத்தத்தின் காரணமாக தான் அவர் உயிரிழந்து உள்ளார். இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும்.

பேனா சிலை சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டால் அதை கண்டிப்பாக உடைப்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. பிரபாகரன் உயிரோடு உள்ளாரா..? அல்லது இறந்துவிட்டாரா..? என்பது முடிந்து போன கதை. அதை இப்போது பேசி பிரயோஜனம் இல்லை. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கும், அவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்கும் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளித்து ராணுவம் காவல்துறை ஆகியவற்றிலும், இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதைத்தான் மத்திய அரசு செய்ய வேண்டும். ஆளுநர் விவகாரமும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரமும், முக்கிய பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்புவதற்காக தான் காமன் சிவில் சட்டத்தை மத்திய அரசு திசை திருப்புகிறது.அதே போன்று தான், தமிழகத்திலும் ஒரு பிரச்சனையில் இருந்து திசை திருப்புவதற்காக தான்,செந்தில் பாலாஜி மற்றும் ஆளுநர் பிரச்சனையை தமிழக அரசு கையில் எடுக்கிறது.

கலைஞருக்கு ஒரு பராசக்தி என்றால், மாரி செல்வராஜுக்கு ஒரு மாமன்னர் என்று தான் கூற வேண்டும். இதில் உதயநிதி எங்கிருந்து வருகிறார். இது போன்ற பட்டியல் இன சமூக மக்களின் பிரச்சினைகளை பேசும் படங்கள் வரவேண்டும். வருவதை நான் வரவேற்கிறேன், இதேபோல சமூக நீதி குறித்து இயக்குநர்ளை பா.ரஞ்சித் கூறிய கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன்.

சமூக நீதியை பேசாத ஜெயலலிதா, தலித் ஏழுமலை, தனபால் ஆகியோரை பதவி கொடுத்து சமூக நீதியை நிலைநாட்டினார். ஆனால், சமூக நீதியை பேசும் திமுக சமூக நீதியை நிலைநாட்டவில்லை. பெரம்பலூர் தொகுதி பொது தொகுதி ஆக மாறியவுடன் ஆ.ராசாவை நீலகிரி தனி தொகுதிக்கு மாற்றியது ஏன் இதுதான் சமூக நீதியை நிலைநாட்டுவதா?

கிருஷ்ணசாமி இப்போது இதுபோன்ற படங்கள் வரக்கூடாது என பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. தேவர் மகன் விருமாண்டி, சண்டியர் படங்கள் வரும்போது அவர் எவ்வாறு எதிர்ப்புகளை தெரிவித்தார், அவர் பேசுவதெல்லாம் சும்மா தேவையற்றது. விஜய் அரசியலுக்கு வரட்டும் மக்கள் பிரச்சினைக்கு போராட்டம், அதை நான் வரவேற்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து தான் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்.

சென்னையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தான், பச்சிளம் குழந்தையின் கை பறிபோய் உள்ளது. பிஞ்சு குழந்தையின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறி இழப்பீடு வழங்குவதை விட்டுவிட்டு, முறையற்ற முறையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கூறுவது ஏற்புடையது அல்ல.

இந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டது. வெளியே தெரியாமல் தினந்தோறும், இது போன்ற விஷயங்கள் பல அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு கவனமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். ராகுல் காந்தியின் பதவி நீக்கம் என்பது பழிவாங்கும் செயல். குஜராத் நீதிமன்றத்தில் எப்படி அவருக்கு நீதி கிடைக்கும் என்று கூற முடியும்.

மக்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜக தலைவர் அருண் ஜெட்லியை மாநிலங்களவை உறுப்பினராகிக்கிய மத்திய அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்கிறது. கட்சியில் சர்வாதிகாரியாக இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும். இதை தான் நான் நாம் தமிழர் கட்சியில் செய்கிறேன். இதை கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம், இல்லாவிட்டால் வெளியே செல்லலாம், எனக் கூறினார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 372

    0

    0