என்னது அதிமுகவில் சசிகலாவா..? சொந்தம் எனக் கூட பார்க்காமல் ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
Author: Babu Lakshmanan5 March 2022, 1:07 pm
சென்னை : அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால், அதற்கு பிடிகொடுக்காமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இதனைக் காரணமாக வைத்து அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா முடிவு செய்துள்ளார். அதற்கேற்றாற் போல், அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள், சசிகலாவை இணைக்க வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை கூறி வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள விருப்பம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், அதிமுக நிர்வாகியுமான ஓ.ராஜா நேற்று சசிகலாவை சந்தித்து பேசினார். இது அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளான எஸ்.முருகேசன், வைகை கருப்புஜி, எஸ்.சேதுபதி ஆகியோரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
சசிகலாவை சந்தித்ததற்காக கட்சியில் இருந்து ஓ.ராஜா நீக்கப்படவில்லை என்றும், சசிகலாவின் தலைமையை ஏற்க ஓபிஎஸ் தயாராக இருப்பதாக அவர் கூறியதால்தான் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.