டெல்லியில் இருந்து காய் நகர்த்தும் ஓபிஎஸ்… தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பு புகார்… சென்னையில் இபிஎஸ் தீவிர ஆலோசனை..!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 11:19 am
Quick Share

சென்னை : ஜுலை 11ம் தேதி இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிரெதிராக செயல்பட்டது. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு, அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், நேற்று இரவே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானாது என்றும், இபிஎஸ் தரப்பு வரும் 11ம் தேதி நடத்த உள்ள பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPS - Updatenews360

அதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்ட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு அளித்துள்ள மனு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி. வீரமணி, பா.வளர்மதி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே, நேற்று நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்று எண்ணியிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கினார் ஓபிஎஸ். ஆனால், ஜுலை 11ம் தேதி கட்டாயம் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றியே ஆகனும் என்ற முனைப்பில் இருக்கும் இபிஎஸ்-க்கு, மற்றுமொரு தலைவலியாக தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளார் ஓபிஎஸ்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 558

    0

    0