இந்தி திணிப்பை ஏற்க முடியாது… ஆங்கிலம் இங்கிருப்பதற்கு காரணமே அண்ணாதான்… ஓபிஎஸ் காட்டம்…!!
Author: Babu Lakshmanan9 April 2022, 2:27 pm
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி ஏற்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சரின் பேச்சு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் பேசியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள
முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலக் காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
போறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.