கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை… மனம் போன போக்கில் பேசுவதை அண்ணாமலை நிறுத்தனும் ; ஓபிஎஸ் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 9:06 pm

அதிமுக ஆட்சியைப் பற்றி தரக்குறைவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது தன்னிடம் இருந்த தங்க நகைகளை அப்போதைய பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் அளித்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இது ஜெயலலிதாவுன் தேசப் பற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஜெயலலிதாவின் தெய்வீகப் பற்று என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இசை, நடிப்பு, நாட்டியம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சிப் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை கற்றறிந்தவர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பல்திறன் படைத்தவர், பன்மொழிப் புலவர் ஜெயலலிதா. ஜெயலலிதா எவ்வித அரசியல் பின்பலமின்றி, தன்னுடைய தனித் திறமையால், மதி நுட்பத்தால், சாணக்யத்தனத்தால், ராஜதந்திரத்தால், சோதனைகளை சாதனைகளாக்கி, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் தலைமையேற்று நடத்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. நாடாளுமன்ற மக்களவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமையும் ஜெயலலிதாவுக்கு உண்டு. சமூக நீதியைக் காத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்பதற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி, அந்த மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்கள், குறிப்பாக சுனாமி ஏற்பட்டபோது, உலக நாடுகள் வியக்கும் வகையில், அவற்றை திறம்பட கையாண்ட பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ், தேவகவுடா, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, டாக்டர் மன்மோகன் சிங், சந்திரசேகர், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதி பாசு, ஏ.பி. பரதன், என். சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். ஜெயலலிதாவும் அனைவரின்மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காதிருந்தால், ஜெயலலிதா இந்தியத் திருநாட்டின் பிரதமராகவே பொறுப்பேற்றிருப்பார். ஜெயலலிதாவிடம் இருந்த ஆளுமைத் திறன், பன்மொழித் திறன், முடிவெடுக்கும் திறன், கட்சி வித்தியாசமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா மீது வைத்திருந்த மதிப்பு ஆகியவைதான் இதற்கான காரணங்கள். இப்படிப்பட்ட உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஜெயலலிதாவின் 1991-1996 ஆண்டு ஆட்சி முடிவடைந்தவுடன், ஜெயலலிதாவை அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

  • Hudson Meek Passed away at the age of 16காரில் இருந்து விழுந்த பிரபல இளம் ஹாலிவுட் நடிகர்.. ஒரு வாரம் கழித்து பிரிந்த உயிர்!
  • Views: - 343

    0

    0