மீண்டும் வன்முறை வெறியாட்டத்தை ஆரம்பித்தது திமுக… பாஜக அலுவலகம் மீது தாக்குதலுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
10 February 2022, 5:42 pm

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வன்முறை வெறியாட்டைத்தை திமுக ஆரம்பித்துவிட்டதாக மக்கள் நினைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-முந்தைய ஆட்சிக்‌ காலத்தில்‌, உள்ளாட்சித்‌ தேர்தல்‌ சமயத்தில்‌, தி.மு.க. எப்படி நடந்து கொண்டதோ அதே முறைதான்‌ தற்போதும்‌ கையாளப்பட்டு வருகிறது. 2006-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்‌ தேர்தலைப்‌ பொறுத்தவரை தேர்தல்‌ நாளன்றும்‌, வாக்கு எண்ணிக்கையின்‌ போதும்‌ வன்முறை அரங்கேறியது. ஆனால்‌, தற்போது வாக்குப்‌ பதிவிற்கு முன்பே வன்முறை வெறியாட்டத்தை தி.மு.க. ஆரம்பித்துவிட்டது என்று மக்கள்‌ நினைக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜனநாயகத்தில்‌ ஆளுங்‌ கட்சியையும்‌, அதன்‌ அரசையும்‌ எதிர்க்கட்சியினரும்‌ மற்றும்‌ பொதுமக்களும்‌ விமர்சனம்‌ செய்வது என்பது ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட மரபு. அரசியல்‌ அமைப்புச்‌ சட்டம்‌ வழங்கும்‌ அடிப்படை உரிமைகளில்‌ பேச்சு மற்றும்‌ எழுத்துச்‌ சுதந்திரம்‌ அடிப்படையானது. ஆட்சி அதிகாரத்தில்‌ இருப்பவர்கள்‌ அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்சி செலுத்தவேண்டும்‌. ஆனால்‌, அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்தை மீறி அதிகாரத்தில்‌ இருக்கும்‌ தி.மு.க. செயல்பட்டு வருவதாக பொதுமக்கள்‌ கருதுகிறார்கள்‌.

இதற்கு எடுத்துக்காட்டாக சென்னை, தியாகராய நகரில்‌ உள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்‌ அலுவலகத்தில்‌ 10-02-2022 அன்று அதிகாலை பெட்ரோல்‌ குண்டுகள்‌ வீசப்பட்டிருப்பதாகவும்‌, அதிகாலையில்‌ நடைபெற்றுள்ளதால்‌ இதில்‌ யாருக்கும்‌ எவ்விதக்‌ காயமும்‌ ஏற்படவில்லை என்றும்‌ இன்று பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன. இருப்பினும்‌, இதன்மூலம்‌ தமிழ்நாட்டில்‌ சட்டம்‌-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இது தி.மு.க.வின்‌ சதி வேலை என பாரதிய ஜனதா கட்சியினர்‌ குற்றம்‌ சாட்டுகின்றனர்‌. இந்தச்‌ சம்பவம்‌ குறித்து அனைத்துக்‌ கோணங்களிலும்‌ ஆராய்ந்து உண்மைக்‌ குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின்‌ முன்‌ நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

பாரதிய ஜனதா கட்சி அலுவலகம்‌ மீதான பெட்ரோல்‌ குண்டு வீச்சிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தக்‌ கொடூரத்‌தாக்குதலில்‌ ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக்‌ கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின்‌ முன்‌ நிறுத்தி தண்டனைப்‌ பெற்றுத்‌ தர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌, இதுபோன்ற சம்பவங்கள்‌ இனி நிகழாவண்ணம்‌
பார்த்துக்‌ கொள்ள வேண்டுமென்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1127

    0

    0