சொன்னபடி, முதியோர் உதவித்தொகையை ரூ.1,500ஆக உயர்த்தாததே தப்பு… இதுல ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பதா..? தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 10:37 am

முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவதாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அதனை நிறைவேற்றாத நிலையில், ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதா..? என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌, பக்கம்‌ 86, பத்தி 322-ல்‌ ‘முதியோர்‌ நலன்‌” என்ற தலைப்பின்கீழ்‌ “தகுதியுள்ள முதியோர்‌ அனைவருக்கும்‌ ஒய்வூதியம்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தில்‌ வழங்கப்படும்‌ 1,000 ரூபாய்‌ உதவித்‌ தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதே தேர்தல்‌ அறிக்கையில்‌ பக்கம்‌ 87, பத்தி 330-ல்‌ “சமூகப்‌ பாதுகாப்பு ஒய்வூதியம்‌” என்ற தலைப்பின்கீழ்‌ “தமிழகத்தில்‌ தற்போது அரசு உதவித்‌ தொகை பெற்று வரும்‌ 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்‌, ஆதரவற்ற மகளிர்‌, கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, திருமணமாகாத 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்‌, அகதிகளாகத்‌ தமிழகத்தில்‌ தங்கியுள்ள இலங்கைத்‌ தமிழர்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ மற்றும்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்கீழ்‌ பயன்பெறும்‌ பயனாளிகள்‌ உட்பட 32 இலட்சம்‌ பேருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்‌ உதவித்‌ தொகை 1,000 ரூபாய்‌ என்பது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேற்படி வாக்குறுதிகளை படிக்கும்போது, ஏற்கெனவே பயன்பெற்று வரும்‌ 32 இலட்சம்‌ பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல்‌, தகுதியிருந்து விடுபட்டவர்கள்‌ யாரேனும்‌ இருப்பின்‌ அவர்களுக்கும்‌ உதவித்‌ தொகை வழங்கப்படும்‌ என்பதும்‌, அது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌ என்பதும்‌ தெள்ளத்‌ தெளிவாகிறது.

இதனைத்‌ தொடர்ந்து, தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன்‌ சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய நிதி நிலை அறிக்கையில்‌, கடந்த பத்து ஆண்டுகளில்‌ சேர்த்தல்‌ மற்றும்‌விலக்குதலில்‌ எண்ணற்ற பிழைகளுடன்‌ உள்ளதாக நோபல்‌ பரிசு பெற்ற வல்லுநர்‌ உட்பட வல்லுநர்கள்‌ தெரிவித்ததாகக்‌ குறிப்பிட்டு, முதியோர்‌ ஓய்வூதியத்‌ திட்டம்‌ முழுமையாகச்‌ சீரமைக்கப்பட்டு, அனைத்து தகுதி வாய்ந்த நபர்களும்‌ விடுதலின்றி பயன்பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும்‌ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேற்காணும்‌ அறிக்கையிலிருந்தே, தகுதியானவர்களை தி.மு.க. அரசு சேர்க்கிறதோ இல்லையோ, ஏற்கெனவே இருக்கிற பயனாளிகளை விலக்குமோ என்ற சந்தேகம்‌ நிலவியது. இதனை, நேற்றைய பத்திரிகைச்‌ செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும்‌, முதியோர்‌ உதவித்‌ தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறம்‌ இருந்தாலும்‌, மறுபுறம்‌ பயனாளிகளின்‌ எண்ணிக்கையை குறைக்கும்‌ வகையிலான நடவடிக்கையினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தற்போது ஓய்வூதியம்‌ பெறும்‌ முதியோரில்‌ ஒரு இலட்சம்‌ ரூபாய்க்கு மேல்‌ நகைக்‌ கடன்‌ பெற்று இருந்தாலோ, மகன்‌ அல்லது மகள்‌ வீட்டில்‌ வசித்தாலோ, சொந்த வீடு இருந்தாலோ முதியோர்‌ நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்‌ என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகக்‌ கூறப்படுகிறது.

ஒருவர்‌ ஒரு இலட்சம்‌ ரூபாய்க்கு மேல்‌ நகைக்‌ கடன்‌ பெறுகிறார்‌ என்றால்‌, வேறு வழியில்லாமல்‌, அவசர செலவுக்காக தன்னிடம்‌ உள்ள நான்கு அல்லது ஐந்து சவரன்‌ நகையை வைத்துக்‌ கடன்‌ பெறுகிறார்‌ என்றுதான்‌ அர்த்தம்‌. வறுமைக்‌ கோட்டிற்குகீழ்‌ வாழ்கிறார்‌ என்றுதான்‌ பொருள்‌. அவரை எப்படி வசதி படைத்தவர்‌ பட்டியலில்‌ சேர்க்க முடியும்‌?

அதேபோன்று, மகன்‌ அல்லது மகள்‌ வீட்டில்‌ வசிக்கிறார்கள்‌ என்றால்‌, அதற்குக்‌ காரணம்‌ வயதான காலத்தில்‌ அவர்களுக்குத்‌ தேவையான பாதுகாப்பு அங்கு கிடைக்கிறது. மேலும்‌, 1,000 ரூபாய்‌ முதியோர்‌ உதவித்‌ தொகை என்பது உண்பதற்கே போதாது என்ற நிலையில்‌ தனியாக வீட்டு வாடகை கொடுத்துக்‌ கொண்டு வாழ்வது என்பது மிகவும்‌ சிரமம்‌. எனவே, இவர்களும்‌ வறுமைக்‌ கோட்டிற்குக்கீழ்‌ வாழ்பவர்கள்தான்‌. சில இடங்களில்‌, முதியோர்‌ ஒய்வூதியம்‌ வருகிறதே என்பதற்காக பெற்றோர்களை வீட்டில்‌ வைத்திருக்கும்‌ மகன்களும்‌, மகள்களும்‌ உண்டு. இதை நிறுத்திவிட்டால்‌, முதியோர்கள்‌ நடுத்‌ தெருவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்‌.

சொந்த வீடு வைத்திருப்பவர்களைப்‌ பொறுத்த வரையில்‌, அந்த வீடு பூர்வீக வீடாகவோ அல்லது குடிசை வீடாகவோ அல்லது ஒட்டு வீடாகவோ கூட இருக்கலாம்‌. வயதான காலத்தில்‌, எந்தவித வருமானமும்‌ இன்றி வீட்டை மட்டும்‌ வைத்து வாழ்க்கை நடத்திட முடியாது. சுப்பிடுவதற்கு அவர்களுக்கு வருமானம்‌ தேவை. எனவே, இவர்களும்‌ வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ வருபவர்கள்‌ தான்‌.

இந்த “யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல்‌, பயனாளிகளின்‌ எண்ணிக்கையை குறைக்க வேண்டும்‌ என்ற நோக்கில்‌, தற்போது முதியோர்‌ ஒய்வூதியம்‌ பெறுவோரை ஏதாவது ஒரு காரணம்‌ சொல்லி நீக்குவது நியாயமற்ற செயல்‌. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. தி.மு.க.வின்‌ இந்தச்‌ செயல்‌ ‘அடி நாக்கிலே நஞ்சும்‌ நுனி நாக்கில்‌ அமுதமும்‌” என்ற பழமொழியைத்‌ தான்‌ நினைவுபடுத்துகிறது. தேர்தல்‌ சமயத்தில்‌ இனிய வார்த்தைகளில்‌ அதைத்‌ தருகிறேன்‌, இதைத்‌ தருகிறேன்‌” என்று சொல்லிவிட்டு, தேர்தல்‌ முடிந்த பிறகு நஞ்சைக்‌ கக்குவது ஏற்புடையதல்ல. “இருப்பதைப்‌ பறிப்பது” என்பது மக்கள்‌ விரோதச்‌ செயல்‌.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, முதியோர்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ பயனாளிகளின்‌ எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்பதற்காக பல நிபந்தனைகளின்‌ மூலம்‌ ஏழை, எளிய முதியோரின்‌ ஒய்வூதியம்‌ நிறுத்தப்படுவதை கைவிடவும்‌, தகுதியானவர்கள்‌ விடுபட்டிருந்தால்‌ அவர்களைச்‌ சேர்க்கவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 887

    2

    0