இபிஎஸ் அல்ல… அடுத்தது பாஜக தான்… சேலத்தை குறிவைத்த ஓபிஎஸ் ; அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கிய ஓபிஎஸ் தரப்பு…!!
Author: Babu Lakshmanan1 July 2023, 5:05 pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக, கட்சி நிர்வாகிகளை அறிவித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக, அண்மையில் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 20ம் தேதி பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதேவேளையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஓ.பன்னீர்செல்வம் தனது பக்கம் இழுத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரக் கூடிய சூழலில், அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுத்து செல்கிறார்.
இதன் ஒருபகுதியாக, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வம் தனியாக தனது அணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தும் நிலையில், அவருக்கு போட்டியாக கொங்கு மண்டலமான சேலம் அல்லது கோவையில் மிகப்பிரமாண்ட அளவில் மாநாடு ஒன்றை நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து முன்மொழியப்பட்டது. அதன்படி சேலத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருமுறை இணைந்தற்கான நமக்குக் கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பாக பாஜகவினர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா..? இல்லையா..? என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்ல என்று மத்திய அரசே சொல்லிவிட்டது, என்றார்.