உட்கட்சி பிரச்சனையில் பிரதமரை வம்புக்கு இழுத்ததால் பாஜக அப்செட்.. இரட்டை வேடம் போடுகிறாரா ஓபிஎஸ்…?
Author: Babu Lakshmanan17 June 2022, 4:45 pm
அதிமுகவில் வெடித்துள்ள ஒற்றை தலைமை பிரச்சினை குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி, அக்கட்சிக்குள்ளும் தமிழக அரசியளிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் பேட்டி
அதே சமயம், அது அவர் மீதான நம்பகத்தன்மை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
அதற்கு காரணம், ஓபிஎஸ் குறிப்பிட்டு சொன்ன 3 விஷயங்கள்தான். அவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது.
தனது நீண்ட நெடிய பேட்டியில், அவர் கூறும்போது, “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், நானும் இபிஎஸ்சும் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். அந்த சமயத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அஜெண்டா சொல்லப்பட்டது. அப்போது இரட்டை தலைமை சரியாக வருமா? என்று கேட்டேன். சரியாக வரும் என்று சொன்னார்கள்.
இப்போது திடீரென ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறார்கள். இந்த பிரச்சினையை எழுப்பியவர்கள் ஒரு அறையில் பேச வேண்டியதை அம்பலத்தில் பேசியதால் அது விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்படும் என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது, இனிமேல் அந்த பதவியே இல்லை என்றும், அந்த பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கு மட்டுமே என்றும் பொதுக்குழுவில் முடிவு செய்தோம். தர்மயுத்த காலத்தில் தனிப்பட்ட நபருக்கோ, தனிப்பட்ட குழுவுக்கோ அதிமுக சென்று விடக்கூடாது என்றுதான் கூறினேன். இப்போதைக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை. இரட்டைக் தலைமையே போதும் என்பதுதான் என் நிலைப்பாடு” என்று கூறியவர், அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல தானே சென்று ஓபிஎஸ் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார், என்கின்றனர்.
மோடிதான்…
“தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றி தற்போது சற்று விலகியிருப்பவர்கள், தியாகம் செய்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை பலப்படுத்தவேண்டும்.
அரசியலமைப்பு சட்டப்படி, துணை முதலமைச்சர் பதவிக்கு என எந்தவித பிரத்யேக அதிகாரமும் கிடையாது. நான் பதவி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில், பிரதமர் நரேந்திரமோடி என்னை அழைத்து கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
பொதுச்செயலாளர் பதவிக்கு, வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்” என 3 முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். கடைசியாக சொன்ன இந்த கருத்துகள்தான் ‘பூமராங்’ போல அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ஓபிஎஸ் கூறும் சம்பவங்கள் நடந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் அவர் சில விஷயங்களை அடியோடு மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.
பாஜக தயவு
2017 பிப்ரவரி மாதம் முதல் வாரம் சசிகலாவின் நிர்ப்பந்தத்தால்தான்
முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தேன். சசிகலாவை பற்றி 10 சதவீதம் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவீதத்தை கூறுவேன்
என்று சபதம் எடுத்து அப்போது ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்திலும் ஓபிஎஸ் ஈடுபட்டார்.
அதேநேரம், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு சிறைக்கு சென்ற பின்பு நிலைமை மாறியது.
இப்படியே போனால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடித்து, தனது தலைமையிலான அணி காணாமல் போய்விடும் என்பதை ஓபிஎஸ் உணர்ந்துகொண்டார். இதற்காக அவர் டெல்லி பாஜக மேலிடத்தையும் நாடினார். அதற்கு பலனும் கிடைத்தது.
அதனால் அதிமுகவின் நியமன பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில்தான் தனது தலைமையிலான 11 எம்எல்ஏக்கள் அணியை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்படுவதற்கு 2017 ஆகஸ்ட் மாதம் ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.
சசிகலா
இப்படி சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அடியோடு வெறுத்து ஒதுக்கிய அவர்தான் இப்போது அப்படியே தலைகீழாக மாறி போய்விட்டார். கடந்த ஆண்டு அவருடைய மனைவியின் மரணத்தின்போது, நேரில் சென்று பன்னீர்செல்வத்துக்கு சசிகலா ஆறுதல் கூறியது மட்டுமின்றி எதிர்கால அரசியல் நிலைமை குறித்தும் இருவரும் மனம் விட்டு பேசியதாகவும் கூறப்பட்டது. இதன் பிறகுதான் ஓபிஎஸ் அப்படியே மாறிப் போனார்.
வரும் 23-ந்தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு முன்பாக ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வரும் நிலையில் சற்று விலகியிருப்பவர்கள், தியாகம் செய்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார். தியாகத் தலைவி என்று சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் அழைத்தும் வருகின்றனர். அவர்தான் தற்போது விலகி இருக்கிறார். எனவே, சசிகலாவை மனதில் வைத்துத்தான் ஓபிஎஸ் இப்படி பேசுகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இது அவருடைய இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால், தான் இதுவரை போட்டு வந்த இரட்டை வேடத்தை அவரே கலைத்து இருக்கிறார் என்றும் கூறவேண்டும்.
பாஜக டென்சன்
இதேபோல பிரதமர் சொன்னால்தான் 2017ல் அதிகாரம் எதுவும் இல்லாத
துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என்று சம்பந்தமில்லாமல் மோடியை வம்புக்கு இழுத்திருக்கிறார். இது பாஜகவை கடும் எரிச்சலுக்கும், டென்ஷனுக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது நிஜம்.
உண்மையில் அப்போது அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது, இன்னும் நான்கு ஆண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில் அது திமுகவுக்கு சாதகமாகி விடலாம் என்பதை மத்திய உள்துறை அமைச்சரும், அப்போதைய பாஜக தலைவருமான அமித்ஷா உணர்ந்து சாமர்த்தியத்துடன் மறைமுகமாக காய்களை நகர்த்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை நீடிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் உண்மை.
ஆனால் ஓபிஎஸ்சோ, பிரதமர் மோடி சொன்னதால்தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதிகாரமில்லாத பதவி என்பது தெரிந்ததே அதை ஒப்புக் கொண்டதாகவும் ஓ பன்னீர்செல்வம் இப்போது கூறுகிறார். மிக முக்கியமான மாநில நிதி அமைச்சர் பதவியை வகித்ததை மறந்து விட்டு அவர் இப்படி பேசுகிறார். அதனால் அடுத்த 4 ஆண்டுகளும் அவர் துணை முதலமைச்சர் பதவியில் மனம் ஒன்றி பணியாற்றவில்லை என்பது தெரிகிறது. அப்படியென்றால் அந்தப் பதவியை அவர் முன்பே மறுத்திருக்கவேண்டும். அதை செய்யத் தவறி விட்டு இப்போது இதையும் ஒரு பிரச்சனையாக்கி பிரதமர் மோடியை குறை கூறுவது போல விமர்சிக்கிறார்.
மோடி அப்படியே சொல்லி இருந்தாலும் கூட, அதை ஓபிஎஸ் இப்போது ஊடகங்களிடம் வெளிப்படுத்தியிருப்பது அநாகரீகமான செயல் ஆகும்.
எனவே அவர் மீது பாஜக, இனி நம்பிக்கை வைக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
தொண்டர்கள் கேள்வி
இன்னும் ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால் 2016 தேர்தலுக்கு முன்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஓபிஎஸ்சை கட்சியில் ஓரம்கட்டியே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளர்ப்பு மகன் திருமண விவகாரம் தொடங்கி அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரை உண்டாக்கியதே சசிகலா, அவருடைய அக்காள் மகன் டிடிவி தினகரன் மற்றும் அவர்களுடைய மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர்தான் என்பது ஓ பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.
பொதுச்செயலாளர் பதவிக்கு, வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று கூறும் பன்னீர்செல்வம், கடந்த மாதம் தனது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத், சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதையும், திமுக ஆட்சியைப் புகழ்ந்து தள்ளியதையும் எப்படிப் பார்க்கிறார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.
ஏனென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில், இப்படியொரு சந்திப்பு நடந்திருந்தாலும் சரி, திமுக ஆட்சியை பாராட்டி பேசி இருந்தாலும் சரி அந்த அதிமுக நிர்வாகி உடனடியாக கடும் கண்டனத்துக்கு உள்ளாகி, பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார் என்பதே எதார்த்தம். அதை அதிமுக தலைமை ஒரு துரோக செயலாகவே பார்த்திருக்கும். எனவே துரோகம் பற்றி ஓ பன்னீர்செல்வம் பேசுவதற்கு, தார்மீக ரீதியாக எந்த உரிமையும் கிடையாது என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.
தற்போது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தனது செல்வாக்கை முற்றிலும் இழந்து பரிதவிப்பதால் ஆதரிக்கும் ஒரு சிலரை வைத்துக்கொண்டு, ஓபிஎஸ் தன்னை அதிமுகவின் ஒரு மாபெரும் சக்தி போல, கட்டிக் கொள்ள நினைப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது”என்று அந்த அரசியல் விமர்சகர்கள், கூறுகின்றனர்.