அதிமுக சார்பில் நாங்கள் தான் போட்டி.. சுயேட்சை சின்னத்திலும் போட்டியிட தயார் : தடபுடலாக அறிவித்த ஓபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 10:39 am

அதிமுக சார்பில் போட்டியிடப் போவதாகவும், பாஜக கேட்டுக் கொண்டால் ஆதரவு அளிக்கவும் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேவேளையில், கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, தற்போது அதிமுக களமிறங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்னை வந்த பிறகு, அதிமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது என்பதால், இதில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக தங்கள் வேட்பாளர் போட்டியிட இருக்கிறார்.
அதிமுக நலனுக்காக எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருக்கிறோம்.

அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கியது நாங்கள் அல்ல. அதிமுக விதிகளின்படி தான் கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தற்போதைய தர்மயுத்தம். இரட்டை இலை சின்னம் முடங்கி போக ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒருவேளை சின்னத்தை தேர்தல் ஆணையமே முடக்கினால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்திடமும் பேசுவோம். கூட்டணி கட்சியினரும் எங்களிடம் பேசி தான் வருகின்றனர். ஒருவேளை பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டால் ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.

அதிமுகவில் தற்போதைய நிலவரப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே உள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் ஃபார்ம்களில் நான் கையெழுத்து போடுவேன். உள்ளாட்சி தேர்தலிலேயே நான் ஒருங்கிணைப்பாளராக கையெழுத்து இட்டேன். எனினும் எடப்பாடி பழனிசாமி தான் கையெழுத்து இடவில்லை, என்றார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ