திமுக ஆறு மாதிரி… ஆனா, அதிமுக ஒரு கடல் மாதிரி… அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
25 February 2022, 11:11 am

எதிர்காலத்தில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் எனக் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, அதன்‌ அடிப்படையில்‌ எதிர்காலத்தில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ இருக்காது என்றும்‌, அது தி.மு.க.வில்‌ சங்கமமாகிவிடும்‌ என்றும்‌ மாண்புமிகு கூட்டுறவுத்‌ துறை அமைச்சர்‌ கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்பது ஒரு குடும்பக்‌ கட்சி. ஓர்‌ ஆற்றினைப்‌ போன்றது. ஆனால்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்பது மாபெரும்‌ மக்கள்‌ இயக்கம்‌. கடலினைப்‌ போன்றது. ஆறு தான்‌ கடலில்‌ போய்‌ கலக்குமே தவிர, கடல்‌ ஆற்றில்‌ போய்‌ கலக்காது என்பதை மாண்புமிகு கூட்டுறவுத்‌ துறை அமைச்சருக்கு முதலில்‌ தெளிவுபடுத்திக்‌ கொள்கிறேன்‌.

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை தொடங்கியபோதும்‌, அதனைத்‌ தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியை அமைத்தபோதும்‌, ஐம்பெரும்‌ தலைவர்களில்‌ ஒருவராக இருந்தவரும்‌, ‘தம்பி வா, தலைமை ஏற்க வா’ என்று பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌
அமைக்கப்பட்டவருமான நடமாடும்‌ பல்கலைக்கழகம்‌’ நாவலர்‌ இரா. நெடுஞ்செழியன்‌, பண்ருட்டி எஸ்‌. இராமச்சந்திரன்‌, எஸ்‌.டி. சோமகந்தாம்‌, கே.ஏ. கிருஷ்ணசாமி, ப. குழந்தைவேலு ஆகியோர்‌ உட்பட தி.மு.க.வின்‌ முன்னணித்‌ தலைவர்கள்‌, கோடிக்கணக்கான தொண்டர்கள்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தில்‌ ஐக்கியமானதையும்‌, தி.மு.க. கூடாரமே காலியானதையும்‌, அதற்குப்‌ பிறகு 13 ஆண்டுகள்‌ தி.மு.க. வனவாசம்‌ இருந்ததையும்‌, மாண்புமிகு கூட்டுறவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ மறந்துவிட்டார்‌ போலும்‌!

அடுத்தபடியாக சிறிய மாநகராட்சிகளையாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ கைப்பற்றி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கத்தில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தினர்‌ உள்ளதாக மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்து இருக்கிறார்‌. இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல்‌ உயர்‌ நீதிமன்றத்தால்‌ ரத்து செய்யப்பட்டது தி.மு.க. ஆட்சிக்‌ காலத்தில்தான்‌.சென்னை உயர்‌ நீதிமன்றத்திடமிருந்தே ‘நற்‌’ சான்றிதழ்‌ பெற்ற கட்சி தி.மு.க. தேர்தல்‌ நடைபெற்ற விதம்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌
கழகத்தினருக்கு நன்கு தெரியும்‌ என்பதால்‌ இதில்‌ கழகத்தினருக்கு எவ்விதமான ஆதங்கமும்‌ இல்லை.

“பொது வாழ்வில்‌ உள்ள வெளிச்சம்‌ மயக்கமூட்டும்‌ ஒளி, இதனால்‌ மகிழவே கூடாது என்பதல்ல, அது முடியாத காரியம்‌. இதனால்‌ மயக்கமடைந்து விடக்கூடாது. அந்த மயக்கம்‌ வாமலிருக்கத்தான்‌ புகழுரைக்‌ கேட்கும்போது, தூற்றுபவரும்‌ உள்ளனர் என்பதை மறவாமலிருக்க வேண்டும்‌. புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள்‌ என்பதையும்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌. அப்போதுதான்‌ மன மயக்கம்‌ ஏற்படாது,” என்றார்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌.

தற்போது மயக்கத்தில்‌ இருக்கிறார்‌ மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌. பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பொன்மொழியைப்‌ படித்துவிட்டு மயக்கத்திலிருந்து அவர்‌ விடுபட வேண்டும்‌. மாண்புமிகு அம்மா அவர்கள்‌ குறிப்பிட்டதுபோல்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்தான்‌ உண்மையான மக்கள்‌ இயக்கம்‌.
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்‌ கொண்ட இயக்கம்‌. இன்னும்‌ எத்தனை நூற்றாண்டுகள்‌ வந்தாலும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ மக்களுக்காகவே இயங்கும்‌ என்பதையும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஒருநாளும்‌ தி.மு.க.வில்‌ சங்கமமாகாது என்பதையும்‌ மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1298

    0

    0