நீட் ரத்து தீர்மானத்தை ஆளுநர் திருப்பியனுப்ப திமுகவே காரணம்… இதுதான் உங்க இலட்சணமா..? பொரிந்து தள்ளிய ஓபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
4 February 2022, 2:25 pm

சென்னை : நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்ப திமுகவே காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு நிர்வாகத்தில்‌ வெளிப்படைத்‌ தன்மை இருக்கும்‌ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டதோடு, ஆட்சிப்‌ பொறுப்பேற்றவுடன்‌ நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம்‌ நடக்கும்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌. ஆனால்‌, கடந்த ஒன்பது மாத கால தி.மு.க. ஆட்சியின்‌ செயல்பாடுகளை உற்று நோக்கிப்‌ பார்த்தால்‌ வெளிப்படைத்‌ தன்மை என்பது அறவே இல்லை என்று தான்‌ எண்ணத்‌ தோன்றுகிறது.

உதாரணத்திற்கு ‘நீட்‌ தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை எடுத்துக்‌ கொள்வோம்‌. “தி.மு.க. ஆட்சி அமையும்போது ‘நீட்‌’ தேர்வு ரத்து செய்யப்படும்‌. நீட்‌ தேர்வினால்‌ வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்‌ தேர்வு மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ மருத்துவம்‌ படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித்‌ தரப்படும்‌. இது உறுதி. எட்டு மாதங்கள்‌ பொறுத்திருங்கள்‌.
கலங்காதிருங்கள்‌. விடியல்‌ பிறக்கும்‌” என்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைத்‌ தேர்தலுக்கு முன்‌ அறிக்கை விடுத்தவர்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌. இந்தச்‌ செய்தி 12-9-2020 நாளிட்ட பத்திரிகைகளில்‌ செய்தியாக வந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைப்‌ பொதுத்‌ தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு தேர்தல்‌ வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. அதில்‌, “கழக ஆட்சி அமைந்தவுடன்‌ முதல்‌ . கூட்டத்‌ தொடரிலேயே நீட்‌ தேர்வை ரத்து செய்யும்‌ சட்டத்தை நிறைவேற்றிக்‌ குடியரசுத்‌ தலைவரின்‌ ஒப்புதலைப்‌ பெற அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்படும்‌” என்று – குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2020-ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவரால்‌ விடுத்த அறிக்கையையும்‌, 2021-ஆம்‌ ஆண்டு வெளியிடப்பட்ட தி.மு.கவின்‌ தேர்தல்‌ அறிக்கையையும்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்தாலே, ‘நீட்‌ தேர்வு ரத்து’ குறித்த தி.மு.க.வின்‌ குரல்‌ குறைந்து இருப்பதை எளிதில்‌ காணலாம்‌.

இன்று ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள்‌ உருண்டோடி விட்டன. நீட்‌ தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ * 13-09-2021 அன்று நிறைவேற்றிவிட்டு ” அதுபற்றி வாய்‌ திறக்காமல்‌ மவுனமாக இருந்தது தி.மு.க. மேற்படி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்ட பின்னர்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அமைச்சர்‌ அவர்கள்‌ மேதகு ஆளுநரை பலமுறை சந்தித்துப்‌ பேசியிருக்கிறார்கள்‌.
அப்போதெல்லாம்‌ நீட்‌ தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு பற்றி மேதகு ஆளுநரிடம்‌ பேசப்பட்டதா? பேசப்பட்டது என்றால்‌, என்ன பேசப்பட்டது? என்ன வாதங்கள்‌ எடுத்து வைக்கப்பட்டன? என்பன குறித்தெல்லாம்‌ தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ தமிழ்நாடு அரசுக்கும்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களுக்கும்‌ உண்டு.

ஆனால்‌, இந்தக்‌ கடமையிலிருந்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நழுவிவிட்டாரோ என்ற எண்ணம்‌ மருத்துவப்‌ படிப்பினை பயில விரும்பும்‌ ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர்‌ மத்தியில்‌ நிலவிவந்த நிலையில்‌, தற்போது” மேதகு ஆளுநர்‌ அவர்கள்‌ மேற்படி சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்யும்‌ பொருட்டு மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களுக்கு திருப்பி அனுப்பி இருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுதான்‌ நீட்‌ தேர்வை ரத்து செய்யும்‌ – இலட்சணமா என்று தமிழ்நாட்டு மக்கள்‌ கேட்கிறார்கள்‌.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட்‌ தேர்வு உடனடியாக ரத்துசெய்யப்படும்‌ என்று தேர்தல்‌ பிரச்சாரம்‌ செய்துவிட்டு, இன்று அடுத்தக்‌ கல்வியாண்டு ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில்‌ நீட்‌ தேர்வு ரத்து தொடர்பான சட்டமுன்வடிவு தமிழ்நாட்டை விட்டே செல்லாமல்‌ இருப்பது மிகுந்த வருத்தமளிக்கும்‌ செயலாகும்‌. தி.மு.க. அரசின்‌ மெத்தனப்‌ போக்கே ‘நீட்‌ தேர்வு ரத்து’ குறித்த சட்டமுன்வடிவு தமிழ்நாட்டை விட்டுச்‌ செல்லாததற்குக்‌ காரணம்‌. தேர்தலுக்கு முன்பு நீட்‌ தேர்வு ரத்து குறித்து அன்றாடம்‌ பேசிக்‌ கொண்டிருந்த தி.மு.க, தேர்தல்‌ முடிந்து ஆட்சிக்கு வந்தவுடன்‌ அதற்காகக்‌ குழுவை அமைத்து காலம்‌ கடத்தி நான்கு மாதங்கள்‌ கழித்து சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இப்போது திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குக்‌ காரணம்‌ சரியான தரவுகளையும்‌, கருத்துக்களையும்‌, மேதகு ஆளுநர்‌ அவர்களிடம்‌ எடுத்துரைக்காததுதான்‌.

2010-ஆம்‌ ஆண்டு மத்திய காங்கிரஸ்‌ அரசால்‌ நீட்‌ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ்‌ கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக்‌ கொண்டிருந்தால்‌ இன்று ‘நீட்‌’ என்ற பிரச்சனையே வந்திருக்காது, தி.மு.க.வின்‌ செயல்பாடு தும்பை விட்டு வாலைப்‌ பிடிப்பது போல்‌ அமைந்துள்ளது. எப்படியாவது ஆட்சியில்‌ ஒட்டிக்‌
கொண்டு இருக்க வேண்டும்‌ என்ற தி.மு.க.வின்‌ சுயநலத்தால்‌ இன்று ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள்‌ பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

அடுத்த ஆண்டு மருத்துவப்‌ படிப்பிற்கான சேர்க்கை இன்னும்‌ மூன்று நான்கு மாதங்களில்‌ நடைபெறவுள்ள நிலையில்‌, தி.மு.க.வின்‌ பேச்சை நம்பி தவறுதலாக வாக்களித்து விட்டோமே என்ற நினைப்புதான்‌ மக்களிடம் ‌- மேலோங்கி நிற்கிறது. பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ அதிக மதிப்பெண்கள்‌ எடுப்பதில்‌ கவனம்‌ செலுத்துவதா அல்லது பயிற்சி நிலையங்களுக்குச்‌ சென்று நீட்‌ தேர்வில்‌ அதிக மதிப்பெண்கள்‌ எடுப்பதில்‌ கவனம்‌ செலுத்துவதா என்று புரியாமல்‌ மாணவ, மாணவியர்‌ குழப்பத்தில்‌ ஆழ்ந்துள்ளனர்‌.

எனவே, தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக்‌ கொடுத்து, வரும்‌ கல்வியாண்டிலாவது நீட்‌ தேர்வினை ரத்து செய்யத்‌ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1333

    0

    0