தோற்றாலும்.. ஜெயித்தாலும்… என்றும் மக்கள் பணியில் அதிமுக : ஓபிஎஸ் அறிக்கை
Author: Babu Lakshmanan22 February 2022, 6:53 pm
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 2வது இடம் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழகம் வெற்றிபெற வேண்டும் என்று கொள்கைப் பிடிப்புடன் உழைத்தவர்களுக்கும் நன்றி. வெற்றி பெற்றிருக்கும் உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துகள்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு, இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்று அணியினரின் பல்வேறு வகையிலான முயற்சிகளுக்கு மயங்கிவிடாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன், “இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களின் அன்பும், ஆதரவும், கழகத்தின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. கழகத்திற்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.
எந்த வகையான சஞ்சலத்திற்கும், சபலத்திற்கும் இடம் தராமல், கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வெற்றிக்காகவும் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும்; கழகத்திற்கு ஆதரவு அளித்த தோழமை இயக்கங்களுக்கும் மற்றும் நட்பு அமைப்புகளுக்கும் நன்றி கூறுகிறேன்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய பதவிகளுக்கு செல்கின்ற கழக உடன்பிறப்புகளுக்கு நல்வாழ்த்துகள். மக்களின் பிரதிநிதிகளாகப் பணியாற்ற இருக்கும் நீங்கள் அனைவரும் கழகத்தின் கொள்கைகளை மனதிற்கொண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் சிறப்பாகப் பணியாற்றிட
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் மக்களுக்கான இயக்கம்; குறிப்பாக எளிய மக்களுக்காகவும், அரசியல் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் பங்கு பெற்றிராத சாமான்ய மக்களுக்காக அயராது பாடுபடும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் இயக்கம். எத்தனை இன்னல்கள், இடர்ப்பாடுகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அஞ்சாது மக்கள் பணியாற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.