திமுகவுக்கு திடீரென ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்… அதிமுக குறித்து கடும் விமர்சனம் ; ஆளுநருக்கு எதிராகவும் வாய்ஸ்!!
Author: Babu Lakshmanan18 November 2023, 2:45 pm
தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி அண்மையில் மீண்டும் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மறுபடியும் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தனித்தீர்மானத்தின் மீது அனைத்து எம்எல்ஏக்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், 10 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- இன்று சிறப்பு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆதரவளிக்கிறேன். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கும் மசோதாவும் தான் இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது என்பது கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளார்கள்;
ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் எப்போதும் பரஸ்பரம் இருக்க வேண்டும்; முன்னுக்கு பின் முரணாக இருக்கக் கூடாது, என தெரிவித்துள்ளார்.