OPS கனவுக்கு வேட்டு வைத்த மதுரை…! பாஜகவுக்கு செக் வைக்க முயற்சியா?….
Author: Babu Lakshmanan22 August 2023, 8:01 pm
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவித்திருப்பது அரசியலில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் ஒரு புரியாத புதிராக இருந்து வருதையே காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், அவர் விரக்தியில் பேசுவதும் வெளிப்படையாக தெரிகிறது.
அதுவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகிய மதுரை மண்ணின் மைந்தர்கள் மூவரை வைத்தே மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்டிய பின்பு ஓபிஎஸ் என்ன செய்வது என்றே தெரியாமல் மிகுந்த குழப்பத்தில் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஏனென்றால் பெரும்பாலான நாளிதழ்களும், தொலைக் காட்சிகளும் அதிமுக மாநாட்டுக்கு வாகனங்களில் சென்ற லட்சக்கணக்கான தொண்டர்களை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே போக்குவரத்தை கட்டுப்படுத்திய போலீசார்
இறக்கி விட்டபோதிலும் அவர்கள் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மாநாட்டு திடலை நோக்கி நடந்து சென்றது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திற்குப் பின்பு முதல் முறையாக இப்போதுதான் நடந்துள்ளது. அது அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த மிகப்பெரிய அங்கீகாரம் என புகழாரம் சூட்டியுள்ளன.
திமுக கூட இது போன்றதொரு மாநாட்டை இதுவரை நடத்தியதில்லை என்று தமிழக மக்கள் ஆச்சர்யப்படும் விதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதுவும் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவே கிடையாது என்று ஓபிஎஸ்சும், டிடிவி தினகரனும் தொடர்ந்து கூறி வந்த நிலையில் மதுரையில் திரண்ட அதிமுக தொண்டர்கள் அதற்குப் பெரிய முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டனர்.
இந்த நிலையில்தான், ஓபிஎஸ் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மஹாலில், மதுரையில் அதிமுக மாநாடு நடந்த அதே நாளில் நடத்தினார்.
வழக்கமாக ஓபிஎஸ் எங்கு கூட்டம் நடத்தினாலும் அந்தப் பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு விடுவார்கள். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்குதான் வாகனங்களில் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசுவதிலேயே குறியாக இருந்தார்.
அவர் கூறும்போது, “எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் சட்ட விதிகளை யார் பறித்தாலும் அதை எதிர்த்து கேட்பதற்குதான் 2-வது தர்ம யுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். திருச்சியில் நாம் நடத்திய மாநாடு எழுச்சியுடன் இருந்தது. டெல்லியே நம்மை திரும்பி பார்த்தது.
வருகிற காலம் தேர்தல் காலமாக இருக்கிறது. நமக்கு பொறுப்புகள் இருக்கிறது. சட்டப் பேரவை, நாடாளுமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் வெல்லப் போவது நாம்தான். அதன் மூலம் தானாகவே அதிமுக நம்மிடம் வந்து சேரும்.
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த போகிறோம். தொண்டர்கள், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பின்னர் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது. கொங்கு மண்டலத்திலேயே வெற்றி பெற முடியவில்லை. 50 ஆண்டுகளாக வரலாறு படைத்த இயக்கத்தை படுபாதளத்தில் தள்ளிய எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மாக்கள் மன்னிக்காது.
நாம்தான் உண்மையான அதிமுக என்பதை வருகிற காலத்தில் நீங்கள்தான் உருவாக்கவேண்டும். செப்டம்பர் 3-ந் தேதி காஞ்சீபுரத்தில் சந்திப்போம். எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற கூட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் மாநில மாநாடு நடத்தப்படும்” என்று ஆவேசமாக குமுறினார்.
அவருடைய பேச்சில் திமுக எதிர்ப்பு என்கிற வாசனை துளி கூட இல்லாதது கூட்டத்திற்கு வந்திருந்த மாவட்டச் செயலாளர்களை முகம் சுளிக்க வைப்பதாக இருந்தது. ஏனென்றால் திமுக எதிர்ப்பு என்பது எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுக தொண்டர்களிடம் உருவாகிவிட்ட ஒன்று. அதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என்கிற நிலையில் அதையெல்லாம் மறந்துவிட்டு EPS மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவதாக ஓபிஎஸ்சின் இப்படியான பேச்சு இன்னும் எத்தனை நாளைக்கு தொடரப் போகிறதோ?… என்ற கேள்வியும் அவருடைய ஆதரவு நிர்வாகிகளுக்கு எரிச்சலையூட்டி இருக்கிறது.
வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கூட்டணியை தோற்கடிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளை தொடங்கியும் விட்டது. மதுரையில் நடத்திய அதிமுக பொன்விழா மாநாட்டின் மூலம் கட்சியில் 95 சதவீத அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதை ஓபிஎஸ்க்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்படும் மதுரை மண்ணிலேயே அவர் நிரூபித்தும் காட்டிவிட்டார்.
மேலும் மதுரை எழுச்சி மாநாடு நடந்து முடிந்த சூட்டோடு சூடாக அது தொடர்பான சுருக்கமான வீடியோ காட்சிகளை அதிமுக எம்பி தம்பிதுரை 21-ம் தேதி காலை 11 மணி அளவில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், அனுப்பி வைத்து அதனுடன், நான் ஏற்கனவே அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறது என்று தங்களிடம் கூறி இருந்தேன். அதை இந்த மாநாடும் உறுதி செய்து இருக்கிறது.
ஓபிஎஸ்சுக்கும், டிடிவி தினகரனுக்கும் குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் பெருமளவில் இருக்கிறது என்ற போலியான கட்டமைப்பையும் இந்த மாநாடு தகர்த்து எறிந்து இருக்கிறது. இதை பிரதமர் மோடியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவேண்டுகிறேன் என்று ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
“திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்களின் வாக்குகளை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி சுறுசுறுப்புடன் களம் இறங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் ஒரு வருடங்களுக்கு முன்பு, தான் அதிமுகவில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தது போல இப்போதும் நினைத்துக் கொண்டு கற்பனை உலகில் காலம் தள்ளி வருகிறார். அது அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலிலோ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலோ எந்தப் பலனையும் தரப் போவதில்லை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“கடந்த ஆறு மாதங்களாகவே டெல்லி பாஜக மேலிடம் ஓபிஎஸ்ஐ கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. அவரையும், டிடிவி தினகரனையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து 2024 தேர்தலை சந்திப்பதற்குத்தான் முதலில் பாஜக தலைமை விரும்பியது. ஆனால் அவர்கள் இருவருமே திமுகவை எதிர்ப்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
எடப்பாடி பழனிசாமியை எப்படி அரசியலில் இருந்து ஓரங்கட்டலாம் என்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். ஆனால் அதேநேரம் எடப்பாடி பழனிசாமியோ திமுகவை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ளார். இதை தம்பிதுரை மூலம் டெல்லி பாஜக கவனத்திற்கு EPS சரியாக கொண்டுபோய் சேர்த்தும் விட்டார்.
இன்னொரு விஷயம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியது சரியான செயல்தானா?…அது போன்றதொரு தலைவரை மன்னித்து உங்கள் கட்சியில் எப்படி சேர்க்க மாட்டீர்களோ அதேபோல்தான் ஓபிஎஸ்ஸை ஒருபோதும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் நாங்களும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்வது பற்றி சிந்திக்கவே இல்லை என்று டெல்லி பாஜக தலைவர்களிடம் அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
தவிர மோடி, 3-வது முறையாக பிரதமராகி விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இதுபோன்ற சூழலில் ஓபிஎஸ் திமுகவை விமர்சிக்காமல் ஒதுங்கிக் கொள்வதை பாஜக தலைமை ரசிக்கவில்லை. இபிஎஸ்சிடம் உள்ளது போன்ற துணிச்சல் இவரிடம் இல்லாததை பாஜக தெரிந்துகொண்டும் விட்டது.
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் ரகசியமாக கண்காணித்தும் வருகின்றனர். இது டிடிவி தினகரனுக்கு தெரிய வந்ததால்தான் சமீபகாலமாக பாஜகவை அவர் கடுமையாக தாக்கி பேசியும் வருகிறார். தவிர அமலாக்கத்துறை மூலம் தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகமும் அவருக்கு வந்துவிட்டது.
அதேநேரம் தன்னை பாஜக கண்டு கொள்ளவில்லையே? என்ற கவலை ஓபிஎஸ்க்கு நிறையவே உள்ளது. அதனால்தான் அக்கட்சியின் டெல்லி தலைவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று அறிவிக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஓபிஎஸ் மிகவும் கவலைப்படுகிறார். ஆனால் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது
பல இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது தொண்டர்களுக்கு நன்கு தெரியும்.
இப்போதைக்கு தமிழகத்தில் திமுக எதிர்ப்பில் மிகவும் உறுதியாக இருப்பது எடப்பாடி பழனிசாமியா? ஓ பன்னீர்செல்வமா? என்று கேட்டால் அதற்கான விடை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால்தான் அதிமுக தொண்டர்களின் 95 சதவீத ஆதரவை EPS பெற்று விட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்சும், டிடிவி தினகரனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் 4 தொகுதிகளில், அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தடுக்க மட்டுமே முடியும். அவர்களாலும் வெற்றி பெற முடியாது என்பதுதான் எதார்த்த நிலை.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பின்பும் பாஜக முழுமையாக ஓபிஎஸ்ஸை புறக்கணித்தால் அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தனது ஆதரவு வேட்பாளர்களை நிறுத்த மாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.
அதேநேரம் அதிமுக, பாஜக, பாமக மற்றும் சிறு கட்சிகளான தேமுதிக,தமாகா, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை ஒரே அணியாக திரண்டால் 10 முதல் 12 இடங்கள் வரை வெற்றி பெறமுடியும்”
என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.