தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறை அதிகாரிகள்… ஷாக் வீடியோவால் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan28 June 2023, 2:11 pm
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். இந்த திருவிழா நாட்களில் நடராஜர் கோவிலில் மூலவராக இருக்கின்ற நடராஜரே தேருக்கு வந்து விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்களுக்கு அனுமதி இல்லை எனத் தீட்சிதர்கள் திடீரென அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தனர். பக்தர்கள் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கனகசபையில் அனுமதி கிடையாது என தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்ற அறநிலையத்துறை அதிகாரி சரண்யா சென்றபோது, தீட்சிதர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி தீட்சிதர்கள் கனகசபை மீதேறி வழிபட தடை விதித்ததால் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் பதாகையை அகற்ற வந்தபோது கோவில் தீட்சிதர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று அந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீட்சிதர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் கனகசபை மீதேறி வழிபட அனுமதிப்பது தொடர்பாக சிதம்பரம் சார் ஆட்சியர் மற்றும் தீட்சிதர்கள் இடையே கோவில் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சார் ஆட்சியர் தலைமையில் பக்தர்களை கனகசபையில் ஏறி வழிபட வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். கனகசபை மீது ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தீட்சிதர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சார் ஆட்சியர் உள்ளிட்டோர் இன்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
Shocking scenes at the historic Chidambaram Natarajar temple as cops and HR&CE officials climb atop the golden platform (கனகசபை) after Dikshitars refused permission for devotees citing security reasons pic.twitter.com/0CtQuaNFB0
— Akshita Nandagopal (@Akshita_N) June 28, 2023
போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் கூச்சலிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.