விமான டிக்கெட்டுக்கு இணையாக ஆம்னி பஸ் டிக்கெட் உயர்வு… ‘இதுதான் விடியா மாடல் ஆட்சி..!’ ; அதிமுக விமர்சனம்…!!
Author: Babu Lakshmanan24 October 2023, 7:52 pm
ஆம்னி பேருந்துகளின் கட்டணம், விமான டிக்கெட்டுகளுக்கு நிகராக இருப்பதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் போதும், மீண்டும் சென்னைக்கு திரும்பும் போதும் விமான டிக்கெட்டுகள் அளவுக்கு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக, விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக தமிழக அரசும் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறது. இருப்பினும், பேருந்து கட்டணம் குறைந்த பாடில்லை.
தற்போது, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 120 ஆம்னி பேருந்துகள் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.
இதனிடையே, ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ததைக் கண்டித்து தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டிய பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதையடுத்து, தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம், விமான டிக்கெட்டுகளுக்கு நிகராக இருப்பதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்னி பேருந்துகளின் அதிகபட்ச கட்டணம் மற்றும் விமான டிக்கெட்டுகளின் கட்டணத்தை ஒப்பிட்டு X தளத்தில் பதிவு போட்டுள்ள அவர், ‘BUS vs FLIGHT இது தான் விடியா மாடல் ஆட்சி..!’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, #பொம்மைமுதல்வர்_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பகிர்ந்துள்ளார்.