தொடர் விடுமுறையால் கிராக்கியான ஆம்னி பேருந்துகள்.. 3 மடங்கு கட்டண உயர்வு ; நடவடிக்கை எடுக்குமா அரசு..?
Author: Babu Lakshmanan12 August 2022, 4:08 pm
தொடர் விடுமுறையால் பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை வருவதால், வெளியூரில் இருப்பவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, தொடர் விடுமுறை இருப்பதால், சென்னை, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விடுமுறையை கழிக்க உள்ளனர்.
இதற்காக, பேருந்து, ரயில்களில் செல்பவர்கள் முன்பதிவு செய்து சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கின்றனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.
இதுபோன்ற காலகட்டங்களில் பயணிகள் நம்ப வேண்டியது ஆம்னி பேருந்துகள்தான். இதற்காக, ஆம்னி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகின்றனர். அப்படி, முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், விதிகளை மீறி இலாப நோக்கில் கட்டணங்களை உயர்த்திக் கொள்வது வாடிக்கையாகவே உள்ளது. இதுபோன்ற காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசும் பல்வேறு அறிவிப்புகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர். ஆனால், அதனை அவர்கள் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்று எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் மூலம், ஆம்னி பேருந்துகள் அரசின் விதிகளை மீறாத வண்ணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில் பயணிகள் காத்திருக்கின்றனர்.