கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு டாட்டா காட்டிய ஓட்டுநர்கள்… 15 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிப்பு…!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 11:49 am

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் உள்ளே வராத 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றுக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் வரும் வழியிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் ஜிஎஸ்டி சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்கின்றன. இதனால் ஆம்னி பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவின் பேரில், ஏராளமான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவல்துறையினருடன் இணைந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லாமல் சென்ற ஆம்னி பேருந்துகளை மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

மாலை ஆறு மணி முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில், 10 மணி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லாமல் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்ற 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இந்த சோதனையில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கே.கே நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களும், கிளாம்பாக்கம் போக்குவரத்து காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 193

    1

    0