தமிழக கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து 20-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
விழுப்புரத்தில் மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல மாதமாகவே தமிழக மக்களின் உணர்வுக்கு விரோதமாகவும், கூட்டாட்சி தத்துவம், அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராகவும் தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார். நாட்டின் பாரம்பரியத்துக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்போல் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இன்றையதினம் சட்டப்பேரவையில் கவர்னர் உரையாற்ற தொடங்கியபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கவர்னருக்கு எதிராக முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தன.
மாநில அரசு ஏற்கனவே வழங்கிய உரைக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், பேரவையில் அதை முழுமையாக படிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
கவர்னரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சி தத்துவத்துக்கு, அவை மரபுக்கு எதிரானது. கவர்னரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் சாசனத்தை மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயலாகும்.
இனியும் தமிழக கவர்னராக ரவி நீடிக்கக்கூடாது.
அவரது செயல்பாடுகளை கண்டித்து வருகிற 20-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
மற்றக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம். மத்திய அரசு, அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும்.
கடந்தாண்டு பொங்கல் பரிசில் கரும்பு வழங்கியபோது பல விமர்சனங்கள் வந்தன. அதை கணக்கில் வைத்து அதிக எச்சரிக்கையுடன் அரசு, இந்தாண்டு 6 அடி செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.
எல்லா இடங்களிலும் 6 அடி நீளத்துக்கு கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும்போது 5 அடி, 5½அடி கரும்புகளையும் கொள்முதல் செய்யுமாறு அரசிடம் எடுத்துரைத்துள்ளோம்.
ஊழலைப்பற்றி பேச பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகுதியில்லை. மத்திய அரசில் ஊழலே இல்லையா? பா.ஜ.க. ஆளக்கூடிய மாநிலங்களில் ஊழல் இல்லையா? எங்கு ஊழல் நடந்தாலும் அதை நாங்கள் கண்டிப்போம், உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளிப்போம்.
செவிலியர்களின் போராட்டம் நியாயமானது, அரசு பரிசீலித்து ஏற்கனவே இருக்கிற பணியை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தேர்தல் வாக்குறுதிகளாக தி.மு.க. அரசு, அறிவித்த வாக்குறுதிகளை 5 ஆண்டு காலத்துக்குள் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்கிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதை விரைந்து செய்தால் நல்லது..
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம், தனது 3-வது சுரங்கப்பணிக்காக நிலம் கையகப்படுத்த உள்ளவர்களை அழைத்து பேச வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு, பணி வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
என்.எல்.சி. நிர்வாகத்தின் கடந்தகால மோசமான அணுகுமுறையால் தற்போது நிலம் கொடுக்க தயங்குகிறார்கள். ஆகவே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.