தீர்ப்பு ஒன்று, ஆப்பு இரண்டு?…பரிதவிப்பில் ஓபிஎஸ் அணி!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 9:41 pm

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்து இருந்தது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையும் அப்போது கோர்ட் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி

இதனால் அதிமுகவில் ஒற்றைத் தலைமையால் எழுந்த பிரச்சினைக்கும், ஒன்பது மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்ப நிலைக்கும் பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றே கருதப்பட்டது.

எனினும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் எங்கள் முன்பாக வைக்கப்படவில்லை. அதனால் தீர்மானங்கள் மீது எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இதன் மீது கீழமை நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்ற கருத்தையும் பதிவு செய்து இருந்தனர்.

இது, அதிமுகவில் தொண்டர்கள் ஆதரவை அடியோடு இழந்துவிட்ட ஓபிஎஸ்-க்கும் அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் போன்றோருக்கும் சற்றே ஆறுதல் தருவதாக அமைந்தது.

அவசர வழக்கு

இதனால் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கவேண்டும். அதற்கு இடைக்கால தடையும் விதிக்கவேண்டும் என்று கோரி ஓபிஎஸ் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு மார்ச் 18,19-ம் தேதிகளில் வேட்பு மனு தாக்கலும் நடந்தது. போட்டி இருந்தால் மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இத் தேர்தலில் போட்டியிட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் ஒருமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பற்றிய அறிவிப்பு மார்ச் 20ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு இடையேதான் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகிய நால்வரும் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுகவில் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதேபோல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த இடைக்கால மனுக்கள் ஏப்ரல் 11ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுச் செயலாளர் தேர்தல் விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அவசர வழக்கு தொடர்ந்ததால் இந்த மனுக்களையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க ஐகோர்ட் முடிவு செய்தது.

இந்த இரண்டு வழக்கிலும் மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. என்ற போதிலும் அன்று திட்டமிட்டபடி தீர்ப்பு கூறப்படவில்லை. மார்ச் 28ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி

இந்த இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை எனவும் தீர்ப்பளித்தார்.

இதன் மூலம் அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தல் செல்லும் என்பதையும் ஐகோர்ட் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அத்துடன் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் இபிஎஸ்

கோர்ட் தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை, தேர்தல் நடத்தும் அலுவலர்களான முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் இருவரும் வெளியிட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழையும் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.

“சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான் உண்மையானது என்பதை அங்கீகரிக்கும் நற்சான்றாக அமைந்திருக்கிறது. ஓபிஎஸ் இனி என்னதான் அவசர அவசரமாக கோர்ட்டு படிகளை ஏறினாலும் அரசியலில் தனி மரம் ஆகிவிட்ட அவரால் அதிலிருந்து மீள முடியுமா? என்பது சந்தேகம்தான்.

ஷாக்கில் டிடிவி, சசிகலா

இது ஓபிஎஸ் -ஐ விட அவரை பெரிதாக நம்பி மனக்கோட்டை கட்டியிருந்த தினகரனுக்கும், சசிகலாவுக்கும்தான் பலத்த அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் என்பது நிச்சயம்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த பிறகு ஓபிஎஸ் இதுவரை குறைந்தபட்சம் பத்து முறையாவது கோர்ட்டு கதவுகளை தட்டியிருப்பார். குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி இரவு 9.30 மணி அளவில் மறுநாள் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை செய்யவோ அதில் குறிப்பிட்ட தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்றோ உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அன்று இரவு 12 மணி அளவில் இரு நீதிபதிகள் அமர்வில் அவசர அவசரமாக மேல் முறையீடு செய்து பொதுக்குழுவை நடத்தலாம். ஆனாலும் குறிப்பிட்ட தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது என்ற தீர்ப்பை ஜூன் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தனக்கு சாதகமாக ஓபிஎஸ் பெற்றார்.

ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு

இதைத்தவிர அவரால் மற்ற எந்த மேல்முறையீட்டு வழக்குகளிலும் வெற்றி பெறவே முடியவில்லை. குறிப்பாக அதிமுகவின் தலைமை கழக அலுவலகத்தை தனது ஆதரவாளர்கள் சூறையாடி ஆவணங்களை கொள்ளையடித்தபோது அதை ஓபிஎஸ் அருகில் நின்று ரசித்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததுதான் அவருக்கு பெரும் வினையாக அமைந்தது.

ஏனென்றால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட வழக்கில் தலைமைக் கழக அலுவலகம் சூறையாடப்பட்டது, தொடர்பான வாதங்கள்தான் ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதை அவர் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்தை தனது முன்னிலையில் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதற்காக அதிமுக தொண்டர்களிடம் இதுவரை ஓபிஎஸ் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. மாறாக டிடிவி தினகரன், சசிகலா, ஒரு பிரபல ஆடிட்டர், திமுகவின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எந்த திமுகவை எதிர்த்து தங்களின் உயிர் மூச்சு இருக்கும் வரை அரசியல் செய்தார்களோ அவர்களது அமோக ஆதரவுடன் தனது அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

சிதைந்து போன ஓபிஎஸ் அணியின் கனவுகள்

ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த பிறகு கடந்த 10 மாதங்களில் திமுக ஆட்சியில் நடந்த அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அவர் நடத்தவில்லை. அதனால்தான் அதிமுகவின் 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் திரண்டு விட்டார்கள் என்பதே உண்மை. கடைசிவரை சட்டப் போராட்டம்தான் நடத்துவேன். எனக்கு கட்சித் தொண்டர்களை பற்றி கவலையே இல்லை என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டால்தான் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஓபிஎஸ்ஐ வைத்து தென் மாவட்டங்கள் முழுவதையும் தங்கள் ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்டு வரும் டிடிவி தினகரன், சசிகலா இருவருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருப்பது அவர்களின் கனவுகளை தவிடு பொடி ஆக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்”என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

  • அமரன் திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபல ஹீரோக்கள்..வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த இயக்குனர்..!
  • Views: - 459

    0

    0