விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு… கருப்புக் கொடி ஏந்தி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் : பரபரக்கும் பரந்தூர்!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2022, 5:51 pm
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயன்ற நிலையில் அதற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை தமிழ்நாடு அரசிடம் இடங்களை பரிந்துரை செய்ய கோரியது. அதன் அடிப்படையில், இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர்.
இந்த இடங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்துள்ள பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.
மேலும் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏகனாபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு பகுதிகளை அரசு விமான நிலையம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் எனவும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டிவிட்டும், கருப்பு கொடியை ஏந்தியும் கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து அம்பேத்கர் சிலை அருகே ஒன்று கூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் தங்கள் கைக் குழந்தைகள் உட்பட கிராமத்தை சேர்ந்த அனைவரும் கலந்துக் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பியும், கண்டன பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.