ஜிகே வாசன், அன்புமணிக்கு மட்டும் தான் முக்கியமா…? திட்டமிட்டே புறக்கணித்ததா பாஜக..? அப்செட்டில் ஓபிஎஸ்..TTV!!

Author: Babu Lakshmanan
16 May 2024, 4:19 pm
Quick Share

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்காதது பல்வேறு விவாதங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி கடந்த 14ம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பேரணியாக நடந்துச் சென்றனர். பிறகு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேர்தல் அதிகாரியைச் சென்று சந்தித்தனர். மற்ற அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

இந்தப் பேரணியில் மோடியுடன் கூட்டணிக் கட்சித்தலைவர்களான ஜி.கே.வாசன், அன்புமணி, தேவநாதன் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட ஏராளமானோர் சென்றனர். பின்னர், ஒவ்வொருவரும் பிரதமர் மோடியுடன் கைகுலக்கி வாழ்த்து சொல்லிய பிறகு, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். மோடி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். அவர் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வல்லரசாக மலரும். உலகில் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் நம் நாடு மாறும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய ஜி.கே.வாசன், “பிரதமர் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்காக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்திருந்தார்கள். ஆகவே வந்துள்ளோம். இது தமிழ்நாட்டுக்குப் பெருமை. ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி வந்து பிரதமருடன் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, எனக் கூறினார்.

மேலும் படிக்க: வைகை அணை திறப்பு… 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!!

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், தமிழகத்தில் அவ்வளவு பிரபலமாகாத தேவநாதன் யாதவுக்கே அழைப்பு விடுக்கப்பட்டு, இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்த இருவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

அன்புமணி, ஜி.ஜே.வாசன், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டிருக்கையில், டிடிவி தினகரன், மட்டும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனாரா என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பாஜக இழுபறி காட்டியது. இதனால், வேறு வழியில்லாமல், சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டுக்கு வந்த போது நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஓபிஎஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போதைய சம்பவமும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக டிடிவி தினகரன் கைகளில் ஒப்படைக்கப்படும் என்று கூறி வரும் நிலையில், தேசிய தலைமையோ, டிடிவி தினகரனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Views: - 221

0

0