ஓபிஎஸ், தினகரனுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா? பாஜக போட்ட தேர்தல் கணக்கு..!!!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2024, 10:51 am
ஓபிஎஸ், தினகரனுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா? பாஜக போட்ட தேர்தல் கணக்கு..!!!
நாடாளுமனற் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன் முதல் கட்சியாக இணைந்தது த.மா.கா. பின்னர் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த சரத்குமார் தனது கட்சியை அப்படியே பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இதையடுத்து நேற்று இரவு தனியார் ஹோட்டல் விடுதியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பாஜக பொறுப்பாளர்கள் உடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் பாஜக உடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி என்ற முடிவை உறுதி செய்தனர்.
இந்த கூட்டணி குறித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நிறைய கட்சிகள் பாஜக தலைமையில் இணைந்து மெகா கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
அதற்கடுத்து பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், குறிப்பிட்ட சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் யாரும் நிர்பந்திக்கவில்லை. ஏற்கனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளதால் மீண்டும் அதே சின்னத்தில் போட்டியிட அமமுக நிர்வாகிகள் விரும்பியுள்ளனர் என்று கூறினார். அவரும் பாஜகவுடன் தலைமையிலான கூட்டணி உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், பாஜக தலைமையில் கூட்டணியில் அமமுக கட்சிக்கு நான்கு தொகுதிகளும், ஓபிஎஸ் பிரிவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அடுத்தடுத்த கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி முடிவுகளில் தெளிவாக தெரிய வரும்.