திக்கு திசை தெரியாமல் திணறும் OPS : கர்நாடக தேர்தல் கனவு அம்பேல்!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 9:38 pm
OPS EPS - Updatenews360
Quick Share

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதுடன் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் அவருடைய தரப்புக்கே உறுதி செய்தும் இருக்கிறது.

குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை

இதுவரை தேர்தல் ஆணையத்தில் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், நான் கையெழுத்து போட்டால்தான் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தையே தேர்தலில் ஒதுக்கீடு செய்வார்கள் என்று கடந்த பத்து மாதங்களாக கூறிவந்த ஓ பன்னீர்செல்வத்துக்கு இது பேரதிர்ச்சி தருவதாக அமைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்கும் அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப்பட்டது என்று கூறியிருப்பதை சுட்டிக் காண்பித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பு வரும் போதெல்லாம் இதுபோல் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இப்போது முதல்முறையாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்தும்
இப்படி புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பு மாநாடு

இந்த நிலையில் இனி கோர்ட்டு தீர்ப்பையோ, தேர்தல் கமிஷனின் உத்தரவுகளையோ மட்டும் நம்பிக் கொண்டு இருக்காமல் மக்கள் மன்றத்தையும் நாங்கள் நாடுவோம் என்று ஓபிஎஸ்சின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் வருகிற 24-ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாநாடு நடக்கிறது என்றும் கூறலாம்.

அதேநேரம் ஓபிஎஸ் தன் கையில் எடுத்திருக்கும் ஆதரவாளர்கள் மாநாடு எந்த அளவிற்கு அவருக்கு உதவும் என்பதை உறுதியாக கூற முடியாது.

எதுவுமே செய்யாத ஓபிஎஸ்

ஏனென்றால் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தபோதே சட்டப் போராட்டத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் நால்வருடன் மக்களையும் சந்தித்திருக்கவேண்டும். தனக்கு ஆதரவான தொண்டர்களை ஒன்று திரட்டி திமுக ஆட்சிக்கு எதிராக கடுமையான சொத்து வரி உயர்வு, பல மடங்கு மின் கட்டணம் அதிகரிப்பு, ஆவின் பால் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து மாநில முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கவேண்டும்.

தவிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள்- சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, போதை பொருள் தாராள நடமாட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராட்டத்தையும் ஓபிஎஸ் நடத்தி இருக்கலாம்.

அல்லது தனது ஆதரவாளர்களை வைத்து போட்டி பொதுக்குழுவையாவது அவர் நடத்தி இருக்கவேண்டும்.

களத்தில் இறங்கயி இபிஎஸ்

அதேநேரம் அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து தற்போது பொதுச் செயலாளராக முன்னேற்றம் கண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்களை திரட்டி தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிரான கண்டன போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தார்.

இந்த விஷயத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரையும் போல திமுகவை எதிர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி மிக உறுதியாக இருப்பதால்தான் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று அதிமுகவின் 99 சதவீதத்தினர் அவர் பக்கம் திரண்டு விட்டனர். இன்று வரை அவர்களில் யாரும் எடப்பாடி பழனிசாமியை விட்டு விலகிச் சென்று விடவில்லை.

மேலும் ஜூலை 11ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்து சூறையாடி முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதையும் அதிமுக தொண்டர்கள் எளிதில் மறக்கவில்லை. டிவி நேரலை ஒளிபரப்பு காட்சிகள் ஓபிஎஸ் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்தும் விட்டது.

ஓபிஎஸ் அதிர்ச்சி

அதேநேரம் மக்கள் மன்றத்தை நாடும் வாய்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது. கிடைக்கவும் செய்தது. ஆனால் அதை ஓபிஎஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

ஏனென்றால், கடந்த பிப்ரவரி 1ம் தேதி காலை எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவித்தார். இதில் பாஜக தலைமை என்ன சொல்லுமோ என்றெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அன்று மாலையில்தான் தனது தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் என்பவரை அறிவித்தார். ஆனாலும் அதில் அவர் குழப்பமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதை காண முடிந்தது. ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜக தனது வேட்பாளரை அறிவித்தால், செந்தில் முருகன் திரும்பப்பெறப்படுவார் என்று ஓபிஎஸ் அங்கும் இங்குமாக ஊசலாடினார்.

இது அவருடைய மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் டெல்லி பாஜக மேலிடத்தின் மீதான தனது விசுவாசத்தை காட்டுவதற்காக ஓபிஎஸ் இப்படியொரு வினோத அறிவிப்பை வெளியிட்டதாகவே அனைவராலும் கருதப்பட்டது.
ஆனால் அவர் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. மாறாக இபிஎஸ் மிகச் சாதுர்யமாக செயல்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது ஆதரவு வேட்பாளருக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வாங்கி கொடுத்தும் விட்டார்.

தவற விட்ட ஓபிஎஸ்

உண்மையிலேயே அதிமுக தொண்டர்களிடம் தனக்குத்தான் செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்றால் ஓபிஎஸ் சுயேட்சையாகவே தனது வேட்பாளரை களத்தில் இறக்கி பலத்தை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யத் தவறி விட்டார்.

மாறாக, திமுக அமைச்சர்கள் 32 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு மாதம் முகாமிட்டும், ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை 120க்கும் மேற்பட்ட பணிமனைகளில் தினமும் 14 மணி நேரம் அடைத்து வைத்தும் அவர்களுக்கு மூன்று வேளை உணவுடன் தினமும் 500, 1000 ரூபாய் கொடுத்து சிறப்பாக உபசரித்தன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத்தான் ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களும் மிகப்பெரிய சாதனையாக பேசுகிறார்கள்.

தேர்தல் விதிமுறைகளை திமுகவும், காங்கிரஸும் பல நூறு மடங்கு காற்றில் பறக்கவிட்டு செயல்பட்டநிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 44 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை.

கர்நாடகா தேர்தல்

அதேபோல இபிஎஸ் பின்பற்றும் பாணியை அச்சு பிசகாமல் அப்படியே காப்பியடித்து ஓபிஎஸ் பின் தொடர்வது அரசியல் வட்டாரத்தில் கேலி பொருளாகவே பேசப்படுகிறது.

கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்ற தகவல் டிவி செய்தி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானது. கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் முன்பு அதிமுக மூன்று முறை வென்றுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது என்றும் கூறப்பட்டது.

புகழேந்தி முகத்தில் கரி பூசிய எடியூரப்பா

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ்சும் சிறிது நேரத்திலேயே நாங்களும் கர்நாடகாவில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்று மாலையே ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஓடோடிச் சென்று பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை பெங்களுரூவில் சந்தித்து எங்களுக்கு மூன்று தொகுதிகளை விட்டுக்கொடுங்கள் என வலியுறுத்தினார். ஆனால் அவரோ நீங்கள் இதுபற்றி டெல்லி பாஜக மேலிடத்திடம்தான் பேசவேண்டும். என்னிடம் அல்ல என்று கூறி புகழேந்தியின் முகத்தில் கரியை பூசினார்.

இதன் பிறகு கடந்த 19ம் தேதி இரவு பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் மனு நிராகரிப்பு

இதையறிந்தும் மறுநாள் காலையில் முதல் வேலையாக புலிகேசி நகர்,கோலார் தங்க வயல், காந்திநகர் தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை ஓபிஎஸ் அவசர அவசரமாக அறிவிக்கிறார். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது புலிகேசி நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பரசனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. முழுமையான விவரங்களை தராததால் ஓபிஎஸ் ஆதரவாளர் மனு நிராகரிக்கப்பட்டது.

இது எல்லாமே அவசரக் கதியில் ஓபிஎஸ்சும், அவருடைய தீவிர ஆதரவாளரான புகழேந்தியும் எடுத்த முடிவின் விளைவுகளே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிடும் விஷயங்களில் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்வதை பார்த்தால் அவர் திக்கு திசை தெரியாத அடர்ந்த காட்டுக்குள் சிக்கி திணறுவதாகவே கருதத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க அவர் வேறு யாரோ ஒருவர் தரும் ஆலோசனையின் அடிப்படையில்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். செயல்படுகிறார். அதனால்தான் அவரால் முந்திக்கொண்டு தேர்தல் விஷயங்களில் எதையும் தெரிவிக்க முடிவதில்லை. தனக்கென்று சொந்தமாக எந்தவொரு திட்டமும் அவரிடம் இருப்பதாக தெரியவில்லை” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திணறும் ஓபிஎஸ்

“கர்நாடக தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து அது பிறப்பித்த உத்தரவு மூலமே தலைமை தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி பெற்று இருக்கிறார்.

அதோடு அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இதுவரை
12 முறை ஓபிஎஸ் கோர்ட் படிகளை ஏறி இருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு தீர்ப்பு மட்டும் அவருக்கு சாதகமாக வந்தது. இனியும் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா என்பது மிகப்பெரிய கேள்வி குறி. அப்படியே வந்தாலும் மேல்முறையீடு செய்யும் நிலைதான் உருவாகும்.

ஒருவேளை இறுதி தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்தாலும் கூட 2024 தேர்தலுக்காக தலைமை தேர்தல் ஆணையம்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும். அதில் கட்சியில் பெரும்பான்மையான எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களிடமே கட்சியும், இரட்டை இலை சின்னமும் ஒப்படைக்கப்படும்.

ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி

யாருக்கு கட்சி சொந்தம் என்ற விவகாரங்களில் பெரும்பான்மையின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும். பல வழக்குகளில் இப்படித்தான் தீர்வு காணப்பட்டும் உள்ளது என்பது அரசியல் சட்ட வல்லுநர்களின் கருத்து.

மேலும் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் இரண்டு முறை கோரிக்கை வைத்து அந்த இருமுறையும் வெற்றி பெற்று இருக்கிறார். அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சட்ட ரீதியான இந்த விஷயங்கள் எல்லாம்ஓ பன்னீர்செல்வத்துக்கு தெரியுமா? என்பது சந்தேகம்தான். அதனால்தான் அவருடைய தடுமாற்றமும், திண்டாட்டமும் தொடர்கிறது. இதை அவருக்கு யாராவது எடுத்துச் சொல்லி வழிகாட்டுவது நல்லது. இல்லையென்றால் அவருடைய அரசியல் எதிர்காலம் மட்டுமின்றி அவருடைய இரண்டு மகன்களின் எதிர்காலமும் நிர்மூலம் ஆகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 372

    0

    0