இனி பண்ருட்டி ராமச்சந்திரன் சுமப்பார்!…நைசாக கழன்றுகொண்ட ஓபிஎஸ்!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2022, 8:02 pm
தற்போது அதிமுகவில் எந்தப் பதவியிலும் இல்லாத ஓ பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாகவே தமிழக மக்களும், அரசியல் வட்டாரமும் தன்னை ஒரு கேலிப் பொருளாக விமர்சிக்கும் அளவிற்கு மாற்றிக்கொண்டு வருகிறார் என்பதை அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது.
ஒற்றைத் தலைமை பிரச்சனை
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை கடந்த ஜூன் மாத மத்தியில் தலை தூக்கியபோது அந்த மாதம் 23ம் தேதி, சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை தடுப்பதற்காக ஓபிஎஸ் தலைகீழாக நின்று பார்த்தார்.
இந்த கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று பூச்சாண்டி காட்டி சென்னை மாநகர காவல் துறையிடம் புகார் மனுவும் கொடுத்தார். அதில் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழுவை நடத்த தடையில்லை, அதேநேரம் திட்டமிடப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் பொதுக்குழுவை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது.
முதல் ஆளாக வந்த ஓபிஎஸ்
இதில் வேடிக்கை என்னவென்றால், பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோர்ட்டு படி ஏறிய ஓ பன்னீர்செல்வமே அந்தக் கூட்டத்தில் முதல் ஆளாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் கலந்து கொண்டார் என்பதுதான்.
அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிதான் கட்சி தலைமையை ஏற்கவேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பி, ஓபிஎஸ்சின் முகத்தில் கரியைப் பூசினர். அப்போதும் கட்சி ஒற்றை தலைமையை நோக்கி நகர்கிறது, அதற்கு தான் எந்த விதத்திலும் பொருத்தமானவர் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
மோடியை வம்புக்கு இழுத்த ஓபிஎஸ்
மாறாக 2017-ல் பிரதமர் மோடி சொன்னதால்தான் துணை முதலமைச்சர் பதவியையே ஏற்றுக் கொண்டேன் என்று குறிப்பிட்டார். தன் மீது நம்பிக்கை இல்லாததால் தான், அவர் மோடியை இதில் கோர்த்து விடுவதாக பலரும் கிண்டலடித்தனர்.
இதையும் கூட அவர் சொந்தமாக கூறவில்லை. அவரை மறைமுகமாக இயக்கும் ஒரு கட்சியின் ஆடிட்டர் சொன்ன யோசனை என்பதும் அப்போது அம்பலமானது.
கோரிக்கையை ஏற்காத கோர்ட்
இந்த நிலையில்தான் ஜூலை 11-ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை
தடுத்து நிறுத்த மீண்டும் அவர் கோர்ட் படி ஏறினார். ஆனாலும் அவருடைய கோரிக்கையை கோர்ட்டு ஏற்கவில்லை. அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அதேநாள் காலை 9 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை தனது ஆதரவாளர்கள் உடைத்துக்கொண்டு திபுதிபுவென்று உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியபோது, இந்த வன்செயலுக்கு ஓபிஎஸ் தலைமை தாங்கியதாக பொதுமக்கள் கோபத்துடன் கேலி பேசவும் செய்தனர்.
ஓபிஎஸ் ஆதராவாளரிடம் கைப்பற்றிய ஆவணங்கள்
இந்த கோரத் தாண்டவத்தின்போது, கட்சி அலுவலகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திருடிச் சென்று விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்பி போலீசில் புகார் அளிக்கவும் செய்தார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் இருந்து அதிமுகவின் 113 முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டு, அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையிலும், நாங்களும் கட்சி அலுவலகத்திற்கு வருவோம் அதற்கு எந்த தடையும் கோர்ட் விதிக்கவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய நகைச்சுவை என்பது அரசியலில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு
இந்த நிலையில்தான் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனை தனது தரப்பு அரசியல் ஆலோசகராக நியமித்து ஓபிஎஸ் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை இதுதான்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்த பிறகுதான், பண்ருட்டி ராமச்சந்திரன் என்னும் ஒரு மூத்த தலைவர் கட்சியில் இருக்கிறார் என்பதே ஓபிஎஸ் நினைவிற்கு வந்துள்ளது. இதை தொடர்ந்தே கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள அவருடைய வீட்டில் ஓபிஎஸ் சந்தித்து கட்சியின் நிலைமை குறித்து பேசியுள்ளார்.
பண்ருட்டியிடம் பேசிய பிரமுகர்கள்
ஆனால் வயது மூப்பின் காரணமாக தன்னால் இனி அரசியலில் அவ்வளவு சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது என்று அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஓபிஎஸ் அதிர்ச்சிக்கு உள்ளானதுதான் மிச்சம்.
அதைத்தொடர்ந்து ஜூலை 31ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்துப் பேசினார். அப்போது அவரும் நீங்கள் ஓபிஎஸ்-க்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரனோ வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி மறுபடியும் ஓபிஎஸ், பண்ருட்டியை சந்தித்துப் பேசினார். பல கட்சிகள் மாறிய தன்னை வயதான காலத்தில் யாரும் சீண்டவில்லை, இவராவது வந்து பார்க்கிறாரே? என்று அவர் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
கட்சியில் இல்லாத செல்வாக்கை உருவாக்குவதற்காக சமீபகாலமாக பணத்தை வாரி இறைக்கத் தொடங்கியிருப்பதாக கூறப்படும் ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கணிசமான அளவில் பொருளாதார உதவி செய்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த நிலையில்தான் அவருக்கு தனது தரப்பில் அரசியல் ஆலோசகர் பதவியை ஓபிஎஸ் வழங்கியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிரடி
தொடக்க காலம் முதல் அதிமுகவில் மட்டுமே உள்ள எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க திமுக, அதிமுக, பாமக,தேமுதிக என்று பல கட்சிகளில் பணியாற்றியும், ஒருமுறை சொந்தக் கட்சி நடத்தியும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் 85 வயது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
அது மட்டுமின்றி இப்போது அதிமுகவிலிருந்தே நீக்கப்படுவதாக கட்சியின் இடைக்கால செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தும் இருக்கிறார். இப்படி சும்மா கிடந்த பண்ருட்டி ராமச்சந்திரனை கேலிப் பொருளாக மாற்றிய பெருமை ஓபிஎஸ்சைத்தான் சேரும். அரசியல் ஆலோசகர் என்று கூறப்பட்டாலும் இனி அவரால் அதிமுகவிற்குள் நுழைய முடியுமா என்பதும் சந்தேகம்தான்.
பரிதாப நிலையில் ஓபிஎஸ்
ஓபிஎஸ்சின் நிலைமையே பரிதாபமாகி விட்ட நிலையில் அவர் வழங்கிய அரசியல் ஆலோசகர் பதவி கேலிக்குரிய ஒன்றாகவும் ஆகி விட்டது. அதேநேரம் ஓபிஎஸ் தந்திரமாக இதுவரை தான் சுமந்து வந்த பெரும் சுமையை பண்ருட்டி ராமச்சந்திரன் தலையில் தூக்கி வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவருடைய ஆலோசனையை இனிமேல் யார் கேட்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
1989-ம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிராக மூத்த தலைவர் நெடுஞ்செழியன் அமைத்த நால்வர் அணியில் பண்ருட்டி ராமச்சந்திரனும் இருந்தார். ஆனால் அந்த அணி தொடங்கிய சில மாதங்களிலேயே காணாமல் போய் விட்டது.
தவிர நான்கு கட்சிகள் மாறிய பண்ருட்டி ராமச்சந்திரனின் யோசனையை இதுவரை எந்தக் கட்சியும் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் நான் எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறியவள் அதைக் கேட்டு அவரும் அப்படியே நடப்பார் என்று சில மாதங்களுக்கு முன்பு சசிகலா ரீல் சுற்றியது போல பண்ருட்டி ராமச்சந்திரனும் இனி பல கட்டுக்கதைகளை அள்ளிவிடும் வாய்ப்பு உள்ளது. அது கேட்பதற்கு மிகுந்த சுவாரசியமாகவும் இருக்கலாம்.
சுயலாபத்தில் தந்தை – மகன்!!
இதை வைத்து, சில வாரங்கள் ஓபிஎஸ்சின் அரசியல் வேண்டுமானால் ஓடலாம். ஆனால் காற்றுப்போன பலூன்களால் ஒருபோதும் உயர பறக்க முடியாது. அது போலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் நிலையும் இன்று மாற்றப்பட்டுவிட்டது. இதைவிட ஒருவரை அவமானப்படுத்தவே முடியாது அவர் மீது ஓபிஎஸ்-க்கு அப்படி என்னதான் கோபம் என்று தெரியவில்லை.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவை எதிர்த்தது போலவே எடப்பாடி பழனிசாமியும் அதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ்சோ சட்டப்பேரவையில் கருணாநிதியின் புகழை பாடுகிறார். அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்பியோ ஸ்டாலின் ஆட்சி பிரமாதம் என்கிறார். இதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை இருவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தங்களுடைய சுய லாபத்திற்காகத்தான் இப்படி தந்தையும், மகனும் நடந்துகொள்கிறார்கள் என்று பொதுமக்களே ஏளனமாக பேசும் அளவிற்கு நிலை ஆகிவிட்டது.
வயதான காலத்தில் இது தேவைதானா?
அதேநேரம் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி மிக உறுதியாக இருப்பதால்தான் அவர் பக்கம் அத்தனை அதிமுக தொண்டர்களும் ஒன்றாக திரண்டு நிற்கிறார்கள். அதற்கு திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிரான மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், அண்ணாவின் 114வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களே சாட்சி. இது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது சந்தேகமாக உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்!
வீட்டில் பேசாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வயதான காலத்தில் இது தேவைதானா?…