இபிஎஸ் பக்கம் தாவிய வேளச்சேரி அசோக்… ஓபிஎஸ் ஆதரவு மா.செ.க்களின் எண்ணிக்கை சரிவு… பரபரப்பில் அதிமுக..!!
Author: Babu Lakshmanan22 June 2022, 9:27 am
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வேளச்சேரி அசோக், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். தற்போது, ஒற்றைத் தலைமை தேவை என்ற வலுக்கத் தொடங்கிய நிலையில், 9 நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 62 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு வெறும் 11 மாவட்ட செயலாளர்களே ஆதரவளித்துள்ளனர்.
எனவே, ஜுன் 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. அதுவும் ஒற்றைத் தலைமைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது உறுதி என்று முன்னாள் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ஓபிஎஸ்க்கு 30 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாகவும், 15 மா.செ.க்கள் ஆதரவாகவும், 15 மா.செ.க்கள் மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.
இப்படியிருக்கையில், நாளுக்கு நாள் ஒற்றைத் தலைமை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வேளச்சேரி அசோக், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் காலை 10 மணிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு 65க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாகவும், 11ஆக இருந்த ஓபிஎஸ்க்கான மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கையில் செல்வது ஏறத்தாழ உறுதியாகி விட்டது.