வேலை தேடி வரும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் பேஸ்புக் குழு: டிஜிபி ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு..!!

Author: Rajesh
12 April 2022, 12:54 pm

சென்னை: பாலியல் தொழிலில் ஈடுபட இளம்பெண்களை வற்புறுத்தும் முகநூல் குழு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தேசியமகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கோயம்பேடு, சின்மயா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய இளவரசன் (28), பரத்குமார் (37), ராஜ்குமார் (30), அம்பரீஷ் (24), சூரஜ் (27), திருப்பதி, சீனிவாசன் ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். மேலும் சோதனை மேற்கொண்ட இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 5 பெண்களும் மீட்கப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 7 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் 30 வயதுக்கு உட்பட்ட திருமணமான இளம்பெண்களை இலக்காக வைத்து, அவர்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை சிலர் பெற்றுக் கொள்கின்றனர்.

பெண்களிடம் இருந்துபெற்ற தனிப்பட்ட புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர். முகநூலில் இவர்கள் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர் என்று அந்த புகார்கள் மூலம் தெரியவருகின்றன.

தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாகவும் சில புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒருபெண் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். தனது தனிப்பட்ட புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாக ஒருவர் மிரட்டுகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுதொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த முகநூல் குழுவானது அரசியல் கட்சியுடன் நெருக்கமாக உள்ளது. அதேபோல, சில அரசியல்வாதிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளது. பல மாதங்கள் ஆகியும் இந்த புகார்கள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற முழுமையான அறிக்கையை மார்ச் 22ம் தேதிக்குள்தயாரித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1443

    0

    0