நம் வழி, தனி வழி : அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2023, 10:19 am
தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன.
இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளன. பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓ பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார். பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இதனால் ஈரோடு இடைத்தேர்தல் பலமுனை போட்டி நிலவும் என தெரிகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது.
இந்தநிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேளதாளங்கள், செண்டை மேளங்கள் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்ததும் நிர்வாகிகள் அவருக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை அளித்தனர்.
அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை அனைவரும் சேர்ந்து நிறைவோற்றுவோம். அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்படுவோம் என்றார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன் பங்கேற்றனர்.