‘தியேட்டரை சேதப்படுத்திய ‘பீஸ்ட்’ ரசிகர்கள்…உரிமையாளர்கள் தான் பொறுப்பு’: திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் வார்னிங்..!!
Author: Rajesh3 April 2022, 5:49 pm
இலவசமாக டிரெய்லர் திரையிடப்படும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியானது. அப்போது, தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் பீஸ்ட் டிரைலர் பார்க்க குவிந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர். நுழைவாயிலில் இருந்து ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றதில் கண்ணாடி உடைந்ததாகவும் ட்ரெய்லர் பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடியதில் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகள் ஏற்படும்போது திரையரங்கத்தின் உரிமத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.