தள்ளிப்போகிறது அண்ணாமலையின் பாத யாத்திரை… தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 11:43 am

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டங்கள் இந்த மாதம் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டதால் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி பாதயாத்திரையை தொடங்க திட்டமிடப்பட்டது. ‘என் மண்-என் மக்கள்’ என்ற கோஷத்துடன் இந்த பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக நடத்த முடிவு செய்துள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக வழித்தடங்களை இறுதி செய்ய தனி குழுவும் போடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் அவர் பாத யாத்திரை செல்லும் வழித்தடத்தை முடிவு செய்கிறார்கள்.

அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அவர் அடுத்த மாதம் 28-ந்தேதிதான் கலந்து கொள்வதாக நேரம் ஒதுக்கி உள்ளார். எனவே அண்ணாமலையின் பாத யாத்திரை மீணடும் 19 நாட்கள் தள்ளிப் போகிறது.

ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரை ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென்மாவட்டங்களில் முதல் கட்டமாக நடைபெறுகிறது.

பாத யாத்திரையின் போது அண்ணாமலை செல்லும் இடங்கள், பேசும் இடங்கள், இரவில் தங்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!