ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் காளை முட்டியதில் பலி… பாலமேடு ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சோகம்

Author: Babu Lakshmanan
16 January 2023, 3:02 pm

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்களும், 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காளைகளுக்கான ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை முடிந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர்.

இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடும் சவாலுக்கு மத்தியில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், காளை மோதி மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 570

    0

    0