பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி… நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு.. மேல்முறையீடு செய்ய திட்டம்!!
Author: Babu Lakshmanan2 August 2023, 8:31 am
பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பழனி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவரின் உறவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கும்பாபிசேகத்திற்கு முன் வரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற பதாகை இருந்த நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக அந்தப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
இதனிடையே, பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை எனக் கூறி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை பெரும் சர்ச்சையானதால் அகற்றப்பட்ட சூழலில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.