பதை பதைக்க வைக்கும் பல்லடம் படுகொலைகள்… பதுங்கிய திமுக கூட்டணி கட்சிகள்.. கனிமொழி, திருமாவளவன் கப்சிப்!

Author: Babu Lakshmanan
4 September 2023, 9:20 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியில் வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் நாலு பேர் கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

செப்டம்பர் 3ம் தேதி இரவு 7 மணி அளவில் நடந்துள்ள இந்த கொடூரம் கேட்போரை பதை பதைக்க வைப்பதாகவும், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

ஏனென்றால் இதுவரை மது குடித்ததை கண்டித்த விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக தமிழக வரலாற்றில் எந்தப் பதிவுகளும் இல்லை என்பதுதான்.

பொதுவாக ரவுடிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல், ஆள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை தொழில் போட்டியால் ஏற்பட்ட முன்பகை காரணமாக ஆங்காங்கே வெட்டு, குத்து நடப்பது வழக்கமான ஒன்றுதான். அதில் கூட ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பார்களா, என்பது சந்தேகம்தான்.

பல்லடம் அருகே கொல்லப்பட்டவர்களில் மாதப்பூர் பஞ்சாயத்தின் பாஜக கிளைத் தலைவர் மோகன்ராஜ், அவருடைய பெரியப்பா மகனும் வர்த்தக பிரமுகருமான செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் என்பது வேதனையளிக்கும் இன்னொரு விஷயம்.

இக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் வெறியுடன் வெட்டி வீழ்த்தியதால் கொல்லப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் அந்த தெரு முழுவதும் ஆங்காங்கே சிதறியும் கிடந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் ரத்த ஆறு ஓடியது போலவும் இருந்தது. இதிலிருந்தே கொலையாளிகள் வன்மத்தோடு இப் படு பாதக செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்தப் படுகொலைகளின் சூத்திரதாரி செந்தில்குமாரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து குடிப்பழக்கம் காரணமாக வேலையிலிருந்து பாதியிலேயே நின்றுகொண்ட வெங்கடேசன் என்பதும், கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் அவர் மோகன் ராஜின் வீட்டு முன்பாக மது அருந்தி ரகளையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் சம்பவ தினத்தன்று தனது நண்பர்கள் இருவரை வரவழைத்த வெங்கடேசன், வழக்கம்போல மோகன் ராஜின் வீட்டு முன்பாக அமர்ந்து கொண்டு மது அருந்தியதுடன் அதைக் கண்டித்த மோகன்ராஜையும் தாயார் புஷ்பவதி, அவருடைய அண்ணன் செந்தில் குமார் மற்றும் புஷ்பவதியின் அக்காள் ரத்தினம்மாள் ஆகிய நால்வரையும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் கொலை குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற ஒன்றிரண்டு கொலை சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் திமுக எம்பி கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் போன்றோர் கொந்தளித்து போய் கண்டன அறிக்கை விடுவார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை படுமோசமாகிவிட்டது என்று உரக்க கோஷமும் எழுப்புவார்கள்.

அதிலும் கனிமொழி எம்பி ஒரு படி மேலே போய் இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதற்குக் காரணம் டாஸ்மாக் மது என்பதை சொல்ல வேண்டியதில்லை என்று முகாரியும் பாடுவார்.

ஆனால் பல்லடம் படுகொலைகள் பற்றி இவர்கள் யாருமே மூச்சு விட்டதாக தெரியவில்லை. நடப்பது தங்களுடைய ஆட்சி என்பதால் அத்தனை பேரும் கப்சிப் ஆகி விட்டார்கள் போலிருக்கிறது.

அதுவும் கொலை செய்யப்பட்ட நால்வரும் பாஜக நிர்வாகியின் குடும்பத்தினர் என்பதால் கண்டனம் தெரிவிப்பதை அப்படியே மூட்டை கட்டி வைத்தும் விட்டனர்.

உதயநிதி கிளப்பிய சனாதன விவகாரத்தில் “கருத்தியலை, கோட்பாட்டை எதிர்த்து பேசுவது ஒட்டுமொத்த இந்துக்களை எதிர்ப்பது ஆகாது, உதயநிதியின் பேச்சை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிப்பது நல்லதல்ல” என்று அன்றாட நிகழ்வுகளுக்கு கருத்து தெரிவிக்கும் திருமாவளவன் பல்லடம் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டுவிட்டது அவருடைய சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது என்ற கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் பல்லடம் படுகொலைகளுக்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிக்கையில், “கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை, கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையோ கொலை செய்யப்பட்டவர்கள் தனது கட்சியின் நிர்வாகியும் அவர்களது குடும்பத்தினரும் என்பதால் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஊடகத்தில் “பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளையின் பாஜக தலைவர் சகோதரர் திரு.மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மோகன் ராஜ் அவரது சகோதர், அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.

குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என ஆவேசமாக குறிப்பிட்டிருக்கிறார்.

சமூக நல ஆர்வலர்கள் சொல்வது என்ன?…

“நாட்டிலேயே 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் குடிப்பழக்கம் உள்ளோர் தமிழகத்தில் 42 சதவீதம் பேர். மாநிலத்தின் தனிநபர் வருவாய் ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் என்று திமுக அரசு பெருமைபட்டுக் கொண்டாலும் அதில் 30 சதவீதத் தொகையை மது போதைக்கு ஒதுக்கி குடும்பங்களையே சீரழிப்பதும் நமது இளைஞர்கள்தான்.

10 நாட்களுக்கு முன்பு சென்னை காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் இருந்த ஒரு இளைஞரை பிடிக்க சென்ற போலீஸ்காரர் ஒருவரை அந்த இளைஞரும் அவருடைய இரண்டு போதை நண்பர்களும் பட்டாக் கத்தியை சுழற்றியடித்தவாறு விரட்டியடித்த சம்பவம் தமிழக காவல்துறைக்கே சவால் விடுவதாக இருந்தது.

அதேபோல் சென்னை தண்டையார்பேட்டையில் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரை கஞ்சா போதையில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் பல்லடம் அருகே இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் கோட்டை விட்டு விட்டதையே காட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அச்சத்தையே ஏற்படுத்தும். எனவே சட்டம்-ஒழுங்கை பராமரிக்க காவல்துறையை தனது கைவசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்” என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுவும் நியாயமான கருத்துதான்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 600

    0

    0