உள்ளாடைகளை கழட்டி சோதனையா? வெடிகுண்டு சோதனையை போல் கொடுமைப்படுத்துவதா? அன்புமணி ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 6:29 pm

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நேற்றைய தினம் நடந்தது. இந்த தேர்வு 499 நகரங்களில் நடந்தது. இதில் 20 லட்சம் மாணவிகள் கலந்து கொண்டனர். நீட் தேர்வின் மூலம் மட்டுமே எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்பதால் இதில் முறைகேடுகளை தடுக்க பல கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொள்கிறது.

இந்த நடைமுறைகளை தேர்வை விட கொடூரமானவையாக இருக்கின்றன. இந்த தேர்விலிருந்து விலக்கு தர வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இது போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பல கட்டங்களாக சோதனைகள் நடத்தப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடந்த நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவருடைய உள்ளாடை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது மாணவியின் உள்ளாடையை சோதனை செய்ததால் அந்த மாணவிக்கு சங்கடத்திற்குள்ளானார். இது போல் உள்ளாடைக்குள் சோதனை செய்வது என்பது முதல் முறை நடப்பது அல்ல.

நிறைய முறை இது போல் உள்ளாடைகளை கழற்ற சொல்லி சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்கு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல் என்றும் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

கலாச்சாரமும், பண்பாடும் போற்றி பாதுகாக்கப்படும் தமிழ்நாட்டில் இத்தகைய இழிவான செயல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மாணவியின் உள்ளாடையை அகற்றியது மிகப்பெரிய வன்முறையும், மனித உரிமை மீறலும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் அந்த மாணவியை கடுமையாக பாதித்திருக்கும். அவரால் அவரது முழு கவனத்தையும் செலுத்தி தேர்வு எழுதியிருக்க முடியாது. நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகளின் நோக்கம் மாணவ, மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகத் தான். தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள் கவனமாக இருந்தாலே எத்தகைய முறைகேட்டையும் தடுக்க முடியும்.

அதை விடுத்து உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு நடத்தப்படும் வெடிகுண்டு சோதனையைப் போல மாணவ, மாணவியரை கொடுமைப்படுத்துவதை மன்னிக்க முடியாது.

நீட் தேர்வுக்கான சோதனையின் போது மாணவிகள் இழிவுபடுத்தப்படுவது இது முதல்முறையல்ல. 2017-ஆம் ஆண்டிலிருந்து இவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2017-ஆம் ஆண்டில் கேரளத்தின் கண்ணூரில் ஒரு மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்டது. இப்போது தமிழ்நாட்டிலும் அத்தகைய அவலம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ) தமிழக அரசு புகார் தெரிவிப்பதுடன், இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்துவதற்கும் ஆணையிட வேண்டும். மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்த மாணவி உள்ளாடை அணியாமல் வந்ததாகவும் சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த விசாரணையில் அது போல் எதுவும் நடைபெறவில்லை என ஒரு சில ஊடகங்களில் செய்தி தெரியவந்துள்ளது.

குறிப்பாக உள்ளாடையை அகற்ற சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாணவி தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 476

    0

    0