433 நாட்களைக் கடந்த போராட்டம்… திடீரென விசிட் அடித்த ஐஐடி குழு ; பரந்தூர் கிராம மக்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு…!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 11:12 am

ஆய்வுக்கு சென்ற ஐஐடி அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் கிராம மக்கள் மீது போலீசார் முதல்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்யவும், நீர் நிலைகள் பாதிக்காமல் எவ்வாறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆய்வு செய்ய பேராசிரியர் மச்சேந்திரன் தலைமையிலான ஐஐடி குழுவினர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர், நீர்நிலை ஆதாரங்களை ஆய்வு செய்யும் குழுவினர் மற்றும் பொதுப் பணித்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் நேற்று விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் 433வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஐஐடி மச்சேந்திரன் கமிட்டியை ஏகனாபுரம் கிராமத்தில் ஆய்வு செய்ய வருவதை ஓட்டி ஏகனாபுரம் கிராம மக்கள்
ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம், ஒரு பிடி மண்ணைக் கூட விமான நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம், வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம், மச்சேந்திரநாதன் கமிட்டியை ஏகனாபுரம் கிராமத்தில் ஆய்வு செய்ய விட மாட்டோம்,’ என கோஷமிட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, சாலை மறியல் பல போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்களை 300க்கும் மேற்பட்டேரை போலீசார் கைது செய்து, ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து உள்ளனர். மேலும் ,13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆய்வுக்கு சென்ற ஐஐடி அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் கிராம மக்கள் மீது போலீசார் முதல்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!