ஊரு விட்டு ஊரு பார்சல் அனுப்பணுமா? நாளை முதல் தமிழக அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ‘பார்சல் சேவை’!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 11:59 am

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் நாளை (3-ந்தேதி) முதல் பார்சல் சேவை தொடங்குகிறது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகிறது.

மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ் மற்றும் லாரியை விட அரசு விரைவு பஸ்களில் பார்சல் கட்டணம் குறைவாகவும், அதேநேரத்தில் ஒரேநாளில் சென்றடையும் வகையிலும் இச்சேவை அளிக்கப்படுகிறது.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாபாரிகள், விவசாயிகள், வியாபார நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களும் தங்கள் உறவினர்களுக்கு பார்சல் அனுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை வரை பொருட்கள் அனுப்ப ரூ.390 கட்டணம் வசூலிக்கப்படும்.

கோயம்பேடு பஸ்நிலையத்தில் பார்சலை பெற்றுக் கொள்ள வேண்டும். இதேபோல சென்னையில் இருந்து இந்த 7 நகரங்களுக்கும் தினசரி பார்சல் சேவை புக்கிங் செய்யப்படும். மாத வாடகை அடிப்படையில் பொருட்களை அனுப்பும் போது அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும்.

எந்தெந்த தேதியில் பொருட்கள் அனுப்புகிறார்களோ அந்த தேதி ‘டிக்’ செய்யப்படும். இதேபோல விரைவு கூரியர் சர்வீடும் தொடங்கப்படும். பார்சல் அனுப்ப விரும்புபவர்கள் அருகில் உள்ள கிளை மேலாளரை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!