மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட 6 திமுக எம்பிக்கள்… எந்தெந்த தொகுதிகளில் திமுக – அதிமுக நேருக்கு நேர் போட்டி தெரியுமா..?
Author: Babu Lakshmanan20 March 2024, 1:06 pm
நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்பியாக உள்ள 6 திமுக எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் போக, எஞ்சியுள்ள 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில், மூத்த திமுக எம்பிக்கள் அப்படியே களமிறங்கும் நிலையில், கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்பியாக உள்ள 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி தொகுதியில் கடந்த முறை செந்தில் குமார் போட்டியிட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக அ.மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சேலம் தொகுதியில் எஸ் பார்த்திபனுக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வகணபதியும், தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பழனி மாணிக்கத்திற்கு பதிலாக, முரசொலியும், தென்காசி தொகுதியில் தனுஷ் எம் குமாருக்கு பதிலாக ராணி ஸ்ரீகுமாரும், கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மலையரசனும், பொள்ளாச்சி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சண்முகநாதனுக்கு பதிலாக ஈஸ்வரசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு விமர்சனங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல, 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்ட நிலையில், ஆளும் திமுகவும், பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் தற்போது வரை 7 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. அரக்கோணம், ஆரணி, சேலம், ஈரோடு, தென்சென்னை, காஞ்சிபுரம் (தனி), வடசென்னை ஆகியவை ஆகும். எஞ்சிய வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடும் நிலையில், நேருக்க நேர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
0
0