பாமகவை தன்பக்கம் இழுத்த இபிஎஸ்…? சேலத்தில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை ; பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக..!!
Author: Babu Lakshmanan17 February 2024, 11:04 am
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஆளும் திமுக தங்களின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறது. அதேவேளையில், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் ஜிகே வாசன் முன்நின்று நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 12 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடத்தை பாமக கேட்பதாகவும், பாஜக 7 இடங்களை மட்டுமே அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை பாமக ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக எம்பி சிவி சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகயுள்ளது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விபரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருப்பதை விட அவரது சொந்த ஊரான சேலத்தில்தான் இருப்பதைதான் விரும்புவார். இங்கிருந்து பேச்சுவார்த்தை நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் அன்புமணி ராமதாஸ் தங்கியிருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது உறுதியானதாகவும், 7 மக்களவை தொகுதி சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க இபிஎஸ் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. தர்மபுரி, கடலூர், சிதம்பரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் வழங்க இபிஎஸ் உறுதியளித்ததாக பாமக தரப்பில் இருந்து வெளியான தகவல் கூறுகின்றன.
அதே வேளையில், எடப்பாடி பழனிசாமியை அன்புமணி சந்திக்கவில்லை என கூறும் அவர்கள், சேலம் எம்எல்ஏ அருள் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தாக தெரிவித்தனர். அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிகவையும் அதிமுக தன்பக்கம் இழுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.