மீண்டும் வெடித்த மேகதாது, சனாதன சர்ச்சை.. காங்., எடுத்த புதிய தேர்தல் அஸ்திரம்… திமுகவுக்கு தலைவலி…?
Author: Babu Lakshmanan22 April 2024, 8:07 pm
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்து விட்டது. இதன்பிறகு தேசிய அரசியல் கட்சிகளிடம் தமிழகம் தொடர்பாக பேச்சு எழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றுதான் கருதப்பட்டது.
ஆனால் அதற்காக யாரும் கவலைப்பட தேவையில்லை, இதோ நாங்கள் இருக்கிறோம் என்பதைப் போல தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மூவரும் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவுக்கு குடைச்சலை கொடுக்கும் விதமாக மிக அண்மையில் சில சரவெடிகளை கொளுத்தி போட்டு இருக்கின்றனர்.
வருகிற மே 13-ம் தேதி தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக சமீபத்தில் தனியார் டிவி செய்தி சேனல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரேவந்த் ரெட்டியிடம் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் படிக்க: இரண்டாக உடையும் ஆப்ரிக்க கண்டம்… காஷ்மீர் போல குளிர்பிரதேசமாக மாறும் கேரளா, கர்நாடகா.. அதிர்ச்சி தகவல்!!
இதற்கு பதிலளித்த அவர், “தெலுங்கானா முதலமைச்சராகவும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் சொல்கிறேன். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறு. அதற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படவும் வேண்டும். அனைத்து மத உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதுடன், இடையூறு செய்யாமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும். அவருடைய இக்கருத்தை ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அது அவரின் தனிப்பட்ட சிந்தனை” என்று அதிரடி காட்டினார்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மலேரியா, டெங்கு, கொரோனா நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பேச்சுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்களும், இதை அப்போது வன்மையாக எதிர்த்தனர்.
இந்த நிலையில்தான், தற்போது தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒருவரின் இக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.
இதேபோல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது “காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம். ஏனென்றால் நாங்களே இங்கே காய்கிறோம். தமிழ்நாட்டில் இருந்தே யாரும் தண்ணீர் கேட்கல. இதுல பத்திரிகைக்காரங்க நீங்க மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்க?” என்று செய்தியாளர் ஒருவரிடம் கேட்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில் “நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. பெங்களூருவில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன் கிடைக்கும். இத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மட்டும் ‘அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது. உச்ச நீதிமன்ற உத்தரவு நமக்கு சாதகமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதிலொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பாக சொல்லி வைத்தாற் போல தென் மாநில காங்கிரசின் மூன்று பெரும் தலைவர்களும் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய போதிலும் அதை தமிழகத்தின் பிரபல டிவி செய்தி சேனல்களோ, முன்னணி நாளிதழ்களோ வெளியிட்டதாக தெரியவில்லை.
26 எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணியில் காங்கிரசும், திமுகவும் இருப்பதால் தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நாளன்று இது மிகப்பெரிய பேசு பொருளாக மாறினால் மாநிலத்தில் திமுக கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க நினைப்போரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அது கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கலாம் என்று கருதியோ என்னவோ தமிழகத்தில் உள்ள திமுக ஆதரவு ஊடகங்கள் எதுவும் இதை பெரிது படுத்தவில்லை என்றே கருதத் தோன்றுகிறது.
அதேநேரம் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பின்பு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும், கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
தவிர காங்கிரசும் திட்டமிட்டு தற்போது இதை பூதாகரமாக்குவது போலத் தெரிகிறது. ஏனென்றால் அடுத்து நடைபெற இருக்கும் 6 கட்ட தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகள் வட மாநிலங்களைச் சேர்ந்தவை. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு விவகாரத்தைத்தான் பாஜக தலைவர்கள் தங்களது பிரதான பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்தனர்.
இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றியும் பெற்றது. தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதான ஒழிப்பு பேச்சு தான் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று வட மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை காங்கிரஸ் தலைமையும் உணர்ந்து கொண்டது.
இதனால்தான் தமிழகத்தில் தேர்தல் நடந்த முடியும் வரை சனாதன ஒழிப்பு, மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரங்களை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கையில் எடுக்கக் கூடாது என்று கட்சியின் டெல்லி மேலிடம் கண்டிப்புடன் கூறிவிட்டது என்கிறார்கள்.
அதேநேரம் இப்போது தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இனி வட மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் பாஜக போல சனாதன தர்ம ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே இண்டியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மூலம் அதை காங்கிரஸ் தனது பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருப்பது போல் தெரிகிறது.
ஏனென்றால் தெலுங்கானாவிலும், கர்நாடகாவிலும் சனாதன தர்மம் குறித்து பாஜக தீவிர பிரச்சாரம் செய்தால் அது தங்கள் கூட்டணிக்கு தோல்வியை தந்து விடலாம் என்று கருதி காங்கிரஸும் தற்போது தமிழக அமைச்சர் உதயநிதியை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம் இது இண்டியா கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றுவதற்குரிய ஒரு நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் வருகிற 26ம் தேதியும், மே 7-ம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் குறைந்த பட்சம் 22 இடங்களை கைப்பற்றி விடவேண்டும் என்று முனைப்புடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சனாதன தர்ம ஆதரவு பேச்சுடன், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தையும் பிரச்சாரமாக மேற்கொண்டால் இந்த வெற்றியை பெற்றுவிட முடியும் என்று கர்நாடக காங்கிரஸ் கணக்கு போடுவதாக தெரிகிறது.
அதை மனதில் வைத்தே டி கே சிவகுமார் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று ஓங்கி அடிக்கிறார். ஆனால் தமிழகத்தில் திமுகவோ, காங்கிரஸோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவையோ தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கும், கர்நாடக துணை முதலமைச்சர் டி சிவக்குமாருக்கும் இதுவரை தங்களது கண்டனத்தை பெரிய அளவில் பதிவு செய்ததாக தெரியவில்லை. இந்த அமைதி
மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் சொல்வது ஆழ்ந்து யோசிக்க கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.