4 எம்பி சீட் கேட்கும் மதிமுக மர்மம்…! காங்கிரசை அடக்க திமுக பிளான்..? சூடு பிடித்த அரசியல் களம்!

Author: Babu Lakshmanan
2 February 2024, 7:36 pm

திமுக கூட்டணி கட்சிகளிடம் 2019 தேர்தலில் தொகுதிகளை கேட்டு பெற்றதில் காணப்பட்ட வேகத்தை விட தற்போது எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு எகிறி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

திமுக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாகவே, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகள் கூடுதல் சீட்டுகளை எங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று அறிவாலயத்திடம் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை கொடுத்தன.

காங்கிரஸ் 14, விசிக 5, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தலா 4, முஸ்லிம் லீக் 2 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி உள்ளன. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மட்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் தங்களுக்கு தலா
ஒரு தொகுதி கேட்டு கோரிக்கை வைத்திருப்பதுதான்.

இந்த கணக்கின்படி பார்த்தால் 35 எம்பி சீட்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்புவது தெரிகிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி கொடுத்துவிட்டால் திமுக போட்டியிடுவதற்கு நான்கு தொகுதிகள்தான் மிஞ்சும்.

நல்லவேளையாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி இதுவரை வெளிப்படையாக எந்த கோரிக்கையும் திமுகவிடம் வைக்கவில்லை. தவிர அக்கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டியதாகவும் தெரியவில்லை.

ஆனால் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை எல்லாம் திமுக அப்படியே அள்ளிக் கொடுத்து விடாது என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று.

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்கள் திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, எம்பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருடன் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் கேட்டதாகவும், புதுச்சேரி உட்பட7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும், தங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி, அதன் விவரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் 9ம் தேதிக்கு பிறகு 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டும் இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலில்தான் பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளை தொகுதி பங்கீடு பேச்சுக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அப்போது யாருக்கு எந்த தொகுதி என ஏறக் குறைய உறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை கூடுதலாக திருச்சி, தென்காசி தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் திமுகவோ குறைந்தபட்சம் 27 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால் இந்த முறை அந்த கட்சிக்கு, ஒரு எம்பி சீட் கிடைத்தாலே பெரிய விஷயம். நாளை நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதுபற்றி ஓரளவு தெரிந்துவிடும்.

இன்னொரு பக்கம், கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவோ விருதுநகர், வடசென்னை, காஞ்சிபுரம் தொகுதிகளை இப்போது கூடுதலாக திமுகவிடம் கேட்டுள்ளது. 2004 ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டோம். அந்த நான்கிலும் வென்றோம் என்பதை மதிமுக சுட்டிக்காட்டுகிறது. மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதையும், அந்த எம்பி சீட் 34 எம்எல்ஏக்களுக்கு சமம் என்பதால் குறைந்தபட்சம் எங்களுக்கு ஆறு நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதுதான் நியாயமானதாக இருக்கும் என்ற வாதத்தையும் முன் வைக்கிறது.

இதெல்லாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

அதனால் மதிமுகவுக்கு ஒரு சீட்டே அதிகபட்சமானது, வைகோவின் மகன் துரை வைகோ தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு இணையான அந்தஸ்தில் இருப்பதால் அவர் போட்டியிடுவதற்கு வசதியாக விருதுநகரோ அல்லது வடசென்னையோ ஒதுக்கப்படலாம்.

2019 தேர்தலில் மதுரை,கோவை தொகுதிகளில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் இம்முறை பெரம்பலூர், சிவகங்கை தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை அறிவாலயத்திடம் வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் மதுரையும், கோவையும் அக்கட்சிக்கு கிடைக்காது என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. ஏனென்றால் தற்போதைய எம்பி சு வெங்கடேசனின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதால் மதுரையில் திமுக போட்டியிட விரும்புகிறது. அதேநேரம் கோவை தொகுதி நடிகர் கமல் கட்சிக்கு ஒதுக்கப்படலாம். இதனால் பெரம்பலூர் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முஸ்லிம் லீக்கோ எங்களுக்கு கடந்த முறை போலவே ராமநாதபுரம் தொகுதியை தாருங்கள் வேலூரை ஒதுக்குவது என்றால் அதை இரண்டாவது தொகுதியாக ஏற்றுக் கொள்கிறோம் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளது.

சரி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி ஒரே நேரத்தில் அதிக தொகுதிகளை டிமாண்ட் செய்வது ஏன்? என்பதற்கு அரசியல் பார்வையாளர்கள் கூறும் காரணங்கள் இவைதான்:

“காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நான்கு மாதங்களுக்கு முன்பே, தமிழகத்தில் நமது கட்சிக்கு 14 தொகுதிகளை கேட்டு வாங்கி விடுங்கள். புதுச்சேரியையும் விட்டு கொடுத்து விடக்கூடாது என்று மாநில தலைவர் கே எஸ் அழகிரியிடம் கண்டிப்புடன் கூறிவிட்டார். தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போதுதான் திமுகவிடம் நாம் எதிர்பார்த்த 42 தொகுதிகள் கிடைக்கவில்லை. 25 தான் கொடுத்தார்கள். அதையும் நாம் போராடித்தான் பெற்றோம். இப்போது நடக்கப் போவதோ நாடாளுமன்றத் தேர்தல். அதனால் அதிக எம்பிக்களை நாம் பெற வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அட்வைஸ் செய்திருந்தார்.

தன்னோடு மிகுந்த நெருக்கம் கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலினிடம் இதை நேரடியாக தெரிவிக்க முடியாத கே எஸ் அழகிரி 15 எம்பி சீட்டுகள் கேட்போம் என்று
ஊடகங்கள் வாயிலாக மேலிட ரகசியத்தை உடைத்து விட்டார். அவர் நினைத்திருந்தால் இந்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்போம் என்று மட்டும் கூறி இருக்கலாம்.

இதனால் சுதாரித்துக் கொண்ட திமுக தலைமையோ நம் கட்சி 27 இடங்களில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில் இதுஎன்ன புது வம்பாக இருக்கிறது என்று நினைத்ததோ என்னவோ தெரியவில்லை, மிகச் சாதுர்யமாக தனது கேம் பிளானை ஆரம்பித்து விட்டது.

இதன் பிறகுதான் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்கத் தொடங்கின. அதுவும் தாங்கள் முந்தைய தேர்தலில் போட்டியிட்டதை விட
இரு மடங்கு தொகுதிகளை எல்லா கட்சிகளுமே டிமாண்ட் செய்தன.

இதை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தது மட்டுமின்றி, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு முன்பாக அறிவாலயத்திடம் பட்டியலாகவும் தாக்கல் செய்து விட்டன.

மேலும் சென்ற முறை திமுக கொடுத்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டன. இப்போதோ எங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டுமென்று வரிந்து கட்டுகின்றன. இதற்கான எல்லா பெருமைகளும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியையே சேரும்.

இதனால் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தனது தொகுதி பங்கீட்டு பேச்சுக் குழுவின் மூலம் எல்லோரும் ஒரே நேரத்தில் அதிக தொகுதிகளை கேட்டால் நாங்கள் எங்கே போவது?… 2024 தேர்தலில் நாங்கள் போட்டியிட நினைக்கும் தொகுதிகளை பெரிய அளவில் குறைத்து நீங்களே எடுத்துக் கொள்வீர்கள் போலிருக்கிறதே?… என்று கடிந்து கொண்டு செக் வைக்க விரும்புவதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

ஏனென்றால் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரசை மட்டும் தனித்து கண்டித்தால் அது சோனியா, ராகுல், கார்கே மூவரிடமும் திமுக மீது கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தலாம்.

அதனால்தான் திமுக தலைமை தெரிவித்தாக கூறப்படும் யோசனைப்படி மற்ற கட்சிகள் இப்படி அதிக தொகுதிகளை கேட்டிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, திமுக தலைமை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயற்சிப்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இது உண்மையா, இல்லையா? என்பதை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 280

    0

    0