வைகோவை தொடர்ந்து திருமா.,வுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் ; அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி..!!
Author: Babu Lakshmanan27 March 2024, 8:38 pm
வைகோவை தொடர்ந்து திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டி மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது.
எனவே, பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த தேர்தல்களில் ஒரு சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை விசிக பெறவில்லை என்றும், கடந்த 3 ஆண்டுகளாக கட்சியின் நிதி கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோவின் மதிமுக கட்சிக்கு பம்பரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் மறுக்கப்பட்டு வருவது இண்டியா கூட்டணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.