அழைத்தும் பிரச்சாரத்திற்கு வராத சசிகலா…? தேனியில் டிடிவி மனைவி பிரச்சாரம் ஏன்…? அப்செட்டில் டிடிவி, ஓபிஎஸ்…!
Author: Babu Lakshmanan9 April 2024, 9:06 pm
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள ஓ பன்னீர்செல்வம் இருவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய சசிகலா வருவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த இரு வாரங்களாகவே அவர்களது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது. ஆனால் சசிகலாவிடம் இருந்து அதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.
மேலும் படிக்க: மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு… CM என்பதால் சலுகை அளிக்க முடியாது ; டெல்லி உயர்நீதிமன்றம்
தேர்தல் பிரச்சாரம் வருகிற 17-ம் தேதி மாலையுடன் முடிய இருக்கும் நிலையில் இனியும் சசிகலா தேர்தல் களத்திற்கு வருவாரா? என்பது சந்தேகம்தான்.
அதேநேரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருப்பார், அவருடைய ஆசி பெற்று தேர்தலை சந்திப்போம் என்று டிடிவியும், ஓபிஎஸ்சும் தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சார்ந்த முக்குலத்தோர் வாக்குகளை அப்படியே அள்ளி விடலாம் என்பதுதான்.
இந்த நிலையில்தான் இருவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். 11 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அமமுகவுக்கு தேனியும், திருச்சியும், ஐந்து தொகுதிகளை எதிர்பார்த்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு ராமநாதபுரமும் பாஜகவால் ஒதுக்கப்பட்டது.
இத்தனைக்கும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய உடனேயே கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வேறு எந்த கட்சிகளும் கூட்டணி பற்றி அறிவிக்காத நிலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு டிடிவி தினகரனும், ஓ பன்னீர் செல்வமும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம். எங்களுக்கு16 தொகுதிகளில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. அதை நிரூபித்துக் காட்டுவோம் என்று அறிவித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ மொத்தமே மூன்று சீட்டுகள்தான்.
தற்போது தேனியில் டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறார். அங்கு அதிமுக சார்பில் நாராயணசாமி என்பவர் களம் காண்கிறார். டிடிவிக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே நடக்கும் மோதலில் அதிமுக வெற்றி வாய்ப்பை தட்டி பறித்து விடக்கூடாது என்பதில் அமமுகவும், திமுகவும் மிகுந்த கவனமாக உள்ளன.
இதனால்தான் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவரது நெருங்கிய தோழியாக திகழ்ந்தவரும் முக்குலத்தோரின் அடையாளமாக கருதப்படுபவருமான சசிகலாவை தனக்கு சாதகமாக தேனியில் பிரச்சாரம் செய்ய வைத்து விடவேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
மேலும் படிக்க: திமுகவினருக்கு வரும் வியாதி… தேர்தல் நேரத்தில் மட்டும் விபூதி அடிச்சுப்பாங்க ; வானதி சீனிவாசன் விமர்சனம்!!!
இதேபோன்ற நிலையில்தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் இருக்கிறார். டிடிவி தினகரனாவது தனது கட்சியின் சின்னத்தில் நிற்கிறார். ஆனால் ஓபிஎஸ்சோ, சுயேட்சையாக போட்டியிடுவதால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மற்ற சுயேட்சைகளோடு சேர்ந்து பின் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அங்கு தோற்றுப் போய் விட்டால் தனக்கு அரசியலில் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும் அவருக்கு உள்ளது. அதனால், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய மக்களின் வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு சசிகலா ஆதரவு தேவை என்று அவரும் கருதுகிறார்.
இந்த நிலையில்தான் டிடிவியும், ஓபிஎஸ்சும் தங்களது ஆதரவு நிர்வாகிகளை ரகசியமாக அனுப்பி வைத்து தங்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்தால் அது பாஜக கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதுபோல ஆகிவிடும் என்று சசிகலா கருதுவதுதான் என்கிறார்கள்.
தவிர சசிகலாவின் சகோதரர் திவாகரன், டிடிவி மீது உள்ள மனக்கசப்பின் காரணமாக நீங்கள் இருவருக்கும் ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என தடுத்து விட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.
ஏனென்றால் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை சசிகலா விரும்பவில்லை என்றும், இருவரும் பத்து தொகுதிகளுக்கு குறையாமல் கேட்டுப் போட்டியிட்டு இருக்கவேண்டும். அப்படி கெத்து காட்டி இருந்தால் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாகப் பெற்றுக் கொடுக்க தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலா இறங்கி இருப்பார் என்றும் திவாகரன் ஆதரவாளர்களில் சிலர் கூறுகின்றனர்.
ஒரு பக்கம் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கூறிவரும் சசிகலாவால் இதுவரை அதை சாதித்து காட்ட முடியவில்லை. அதனால்தான் என்னவோ 2021 தமிழக தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல்தான் இப்போதும் அமைதியாகிவிட்டார்.
சசிகலா பிரச்சாரத்திற்கு வரமறுத்து விட்டதால்தான் மனைவி அனுராதாவை தேனி தொகுதி முழுக்க டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க அனுப்பி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் டிடிவியும், ஓபிஎஸ்சும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை சசிகலா விரும்பவே இல்லை என்ற இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இதற்கு திவாகரன் ஆதரவாளர்கள் சில காரணங்களை கூறுகின்றனர்.
“ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாத முதல் வாரத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து விலகும்படி கூறிவிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சசிகலாவை தேர்வு செய்தனர்.
தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக முதலமைச்சர் பதவியை பறித்து விட்டனர் என்று சசிகலா மீது குற்றம்சாட்டி பிப்ரவரி 7ம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடம் முன்பாக அமர்ந்து ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தமும் நடத்தினார்.
சசிகலா விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம், திடீரென பிப்ரவரி 14ம் தேதி சசிகலாவை குற்றவாளி என்று அறிவித்து நான்காண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனால் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாத நிலையில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தமிழக முதலமைச்சராக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே ஓபிஎஸ், டெல்லி பாஜக மேலிடத்தை நீதித்துறையில் தலையிட வைத்து சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை உடனடியாக வெளியிட வைத்து விட்டார். இல்லையென்றால் தீர்ப்பு கிடப்பிலேயே போடப்பட்டிருக்கும். சசிகலாவும் சில மாதங்களாவது தமிழக முதலமைச்சர் ஆக பதவி வகித்திருப்பார். அதை தடுத்தது ஓபிஎஸ்தான்.
அதேபோல்தான் டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்கவே கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு தேர்தல் வெற்றிக்காக சசிகலாவின் பிரச்சாரத்தை எதிர்பார்க்கிறார்கள். தான் சிறை செல்ல காரணமாக இருந்ததே ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம்தான். இந்த பழைய நினைவுகளை அவர் இன்றளவும் மறந்துவிடவில்லை.
அதனால்தான் டிடிவியும், ஓபிஎஸ்சும் பலமுறை அழைத்தும் கூட அவர்கள் இருவரையும் ஆதரித்து சசிகலா பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று திவாகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இது டிடிவி தினகரனுக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமின்றி பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் முழுமையாக கிடைக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.
இதற்கான விடை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான ஜூன் நான்காம் தேதியன்று தெரிந்து விடும்.