முடிவுக்கு வராத தொகுதி பங்கீடு… !அமித்ஷா நிபந்தனை விதித்தாரா…? பாஜகவால் அதிமுகவுக்கு நெருக்கடியா…?
Author: Babu Lakshmanan28 April 2023, 8:45 pm
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த சந்திப்பில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, எஸ் பி வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டதுதான்.
கடந்த சில வாரங்களாகவே அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே காணப்படும் கசப்புணர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையிலும் அண்ணாமலை டெல்லிக்கு அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு இந்த சந்திப்பில் பங்கேற்க வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதனால் அமித்ஷா, ஜே பி நட்டா ஆகியோருடனான சந்திப்பு அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்ததுடன் சமரச பேச்சுவார்த்தை ஆகவும் அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும்.
அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்பு டெல்லியில் முதல் முறையாக அமித்ஷாவை சந்தித்து பேசி இருப்பதால் அவருடைய தலைமையிலான அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையின்போது “நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும்” என்பதை பாஜக தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி சுட்டி காண்பித்தும் இருக்கிறார்.
அப்போது அமித்ஷா, “தமிழகத்தில் நமது நம்பர் ஒன் எதிரி திமுகதான். அவர்களின் ஆட்சியில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் குறித்து அதிமுக வலிமையான பிரச்சாரத்தை மக்களிடம் முன்னெடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது “அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது” என்று கூறியிருப்பதன் மூலம் இப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதையும் உணர முடிகிறது.
மேலும் “ஓ பன்னீர்செல்வம் திமுகவின் B டீம் போல செயல்படுகிறார். இது எல்லோருக்கும் தெரியும்”என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால் அதிமுக பாஜக கூட்டணி பேச்சின்போது ஓபிஎஸ்-ன் திமுக ஆதரவு செயல்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல டிடிவி தினகரனின் அமமுக கூடாரமும் அடியோடு காலி ஆகிவிட்டதை அமித்ஷாவிடமும், ஜே பி நட்டாவிடமும் எடப்பாடி பழனிசாமி விளக்கி கூறியிருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனால் 2024 தேர்தலின்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ டெல்லி பாஜக மேலிடம் கை கோர்க்காது என்று நம்பலாம்.
இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் யார் யார் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தான தொகுதி பங்கீட்டை சென்னையில் முடிவு செய்து தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக தொடங்கி விடவேண்டும். அப்போதுதான் 25 தொகுதிகளில் வெற்றியை இலக்காக வைத்து செயல்பட முடியும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அதேசமயம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 10 சீட்டுகள் பாஜகவுக்கும் அதன் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்குவதை உறுதி செய்யவேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவிர புதுச்சேரி தொகுதியையும் தங்களுடைய கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். அதேபோல பாமகவையும், தேமுதிகவையும் நமது கூட்டணிக்குள் கண்டிப்பாக கொண்டு வந்து கூட்டணியை இன்னும் வலுப்படுத்தவேண்டும்” என்று பாஜக வலியுறுத்தி இருக்கிறது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,கோவை, நீலகிரி, பெரம்பலூர், வேலூர், ராமநாதபுரம் ஆகிய 9 தொகுதிகளை பா.ஜனதா இப்போதே தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் அமையும் அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்புவது வெளிப்படையாகவே தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல ஐந்து தொகுதிகளை கொடுத்தால் ஏற்க மாட்டோம் என்பதையும் பாஜக மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறை வாக்காளர்களிடமும், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடமும் அவருடைய அதிரடி அரசியல் குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதுதான். தவிர பிரதமர் மோடிக்கும் தமிழகத்தில் தனி நபர் செல்வாக்கு உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் தங்களது வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என்று மாநில பாஜக தலைமை கருதுகிறது.
“தங்களது கூட்டணியில் உள்ள நான்கு சிறு கட்சிகளுக்கும் 4 இடங்களை பாஜக ஒதுக்கும் என்பதும் உறுதி. இந்த கட்சிகள் எல்லாம் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்புகளே அதிகம். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்
புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளி வைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 8000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இதனால் அவர் இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா?… என்ற கேள்வியும் எழுகிறது.
இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்கு ஜூன் மாதத்திற்குள் இரு கட்சிகளும் தொகுதி பங்கீட்டை பேசி முடிப்பதுதான் நல்லது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“தேசிய பாஜக தலைவர்கள் 14 நாடாளுமன்ற தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கேட்பதாக கூறப்படுவதால் தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் அதிமுகவே தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம்.
இந்த மூன்று கட்சிகளுக்கும் அதிகபட்சம் 8 இடங்களை அதிமுக தரவேண்டி இருக்கும். இதனால் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை
17 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. எனினும் கடந்த தேர்தலை போல
20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவே விரும்பும். இதனால் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று குறையலாம்.
ஏனெனில் பாஜகவை பொறுத்தவரை 12 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அதன் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளின் வேட்பாளர்களும் தாமரை சின்னத்தில்தான் நிற்பார்கள். அதனால் அக் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தான் கருதப்படும். அதேநேரம் பாமகவையும், தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வரும்போது அந்த இரு கட்சிகளும் அவர்களது சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள்.
ஒருவேளை பாமகவையும், தேமுதிகவையும் கூட்டணியில் சேர்ப்பது எங்கள் பொறுப்பு என்று பாஜக கூறினால் பாஜகவிடம் 19 தொகுதிகளை கொடுத்துவிட்டு 20 இடங்களில் அதிமுக போட்டியிடும் வாய்ப்பும் உண்டு.
தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள DMK Files என்னும் திமுக அமைச்சர்கள், எம்பிக்களின்
ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து பட்டியல், நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சை விவகாரத்தால் திமுகவிற்கு மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தால் முழு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களது தலைமையில் அமையும் கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விரும்பவும் செய்யலாம்.
தமிழக இளைஞர்களிடையே பாஜகவுக்கு நல்ல ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அக்கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பில் போதிய பலம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மொத்தம் சுமார் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் திமுக தரப்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்த பட்சம் 4 முகவர்களை தயார் நிலையில் வைத்து இருக்கிறார்கள். அதிமுகவிலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் முகவர்கள் உண்டு. ஆனால் தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் உள்ள 12,000 கிராமங்கள் பெரும்பாலானவற்றில் பாஜகவிற்கு வாக்குச்சாவடி முகவர்களே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நகர்ப்புறங்களிலும் கூட குறிப்பிட்ட அளவிற்குத்தான் உள்ளனர்.
எனவே வாக்குச்சாவடி முகவர்களின் கட்டமைப்பை பெரிய அளவிற்கு உருவாக்காமல் தமிழக பாஜகவால் தனிப்பட்ட முறையில் தேர்தலில் சாதிப்பது மிகக் கடினம். ஏனென்றால் வாக்குப்பதிவின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலும் திமுகவின் அனுதாபிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஒரு சார்பாக நடந்து கொள்ளாமல் விழிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் வாக்குச் சாவடி முகவர்ளுக்கு உள்ளது.
மேலும் வாக்குப்பதிவு தொடங்கி முடியும் நேரம் வரை அதை முழுமையாக கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை கருத்தில் கொண்டு தமிழக பாஜக கறார் காட்டாமல் அதிமுக மட்டும் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் போட்டியிடுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.