கோவையும், டார்ச் லைட்டும் கிடையாதா…? திமுக வைத்த ‘டபுள் செக்’… கடும் ‘அப்செட்’டில் கமல்…!
Author: Babu Lakshmanan9 November 2023, 8:01 pm
2024 தேர்தலுக்காக கூட்டணி கணக்குகளை போட இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையேதான் கடும் மும்முனை போட்டி நிலவுகிறது என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று.
இதில் சிறு சிறு கட்சிகளின் நிலைமைதான் கேள்விக்குறியாக உள்ளது. அதில் ஒன்றுதான், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.
அக்கட்சியின் தலைவரான கமல் 2024 நாடாளுமன்ற தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட கடந்த இரண்டு வருடங்களாகவே தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அடிக்கடி கோவைக்கு வந்து செல்வது, கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக கலந்தாலோசிப்பது என தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் செய்கிறார். இதற்காக அவர் இதுவரை ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார் என்று கூறப்படுவது இன்னொரு கூடுதல் தகவல்!
2021 தமிழக தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர், வானதி சீனிவாசனுடன் நேருக்கு நேர் மோதி சுமார் 1700 ஓட்டுகள் வித்தியாசத்தில் கமல் தோல்வி கண்டதாலும், 2019 தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் தனித்து போட்டியிட்ட அவருடைய கட்சிக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் கிடைத்ததாலும் கோவையின் மீது எப்போதுமே அவருக்கு ஒரு கண் உண்டு.
இதுவரை நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் எந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்பதே முடிவாகாத நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அவர் கொண்டிருக்கும் நெருக்கம் காரணமாக திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன.
அதேநேரம் தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் சார்பில் கமலுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?…அல்லது தமிழக காங்கிரஸ் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்து கமலைப் போட்டியிட வைக்குமா?… என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில்தான் கமல் அதிர்ச்சி அடையும் விதமாக கோவை தொகுதியை 2019 தேர்தல் போலவே கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்க்கு ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசனுக்கு இந்த முறை மதுரை ஒதுக்கப்படாது என்றும் அங்கு திமுகவே போட்டியிட விரும்புகிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் ஒரே நேரத்தில் மதுரையையும், கோவையையும் மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்காமல் வேறு கட்சிகளுக்கு கொடுத்தால் அதனால் கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்படலாம் என்று கருதி கோவையை மட்டும் மார்க்சிஸ்ட்டுக்கு கொடுக்க திமுக விரும்புகிறது, என்கிறார்கள்.
இதனால் கோவை தொகுதி கமல் கட்சிக்கு கிடைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
அதேநேரம் திமுக கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி கமலுக்கு ஒதுக்கப்படலாம் என்ற பரபரப்பு பேச்சும் அறிவாலய வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.
கோவையில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் வேலை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் பெரம்பலூர்தான் அக் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல் கமலை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதைவிட மிக முக்கியமாக 2019 தேர்தலில் பாரிவேந்தர் திமுக சின்னத்தில் போட்டியிட்டுதான் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அதனால் நடிகர் கமலும் அதேபோல் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதாக தெரிகிறது.
இதற்கு முக்கிய காரணம் கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னம் இன்னும் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. திமுக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னங்களுடன் ஒப்பிட்டால் கமல் கட்சியின் சின்னத்திற்கு மவுசு மிகக் குறைவு. அதனால் அதிக கிராமங்களை கொண்ட பெரம்பலூரில் அவர் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டால், கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் போல இழுபறியில் வெற்றி பெற்றது போன்ற இக்கட்டான சூழல் ஏற்படலாம்.
2021 தமிழக தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கூட கமல் இதுபோல்தான் கடைசி சில சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இது போன்ற நெருக்கடியை கமல் மீண்டும் வரவழைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். அதனால் அவர் திமுக அல்லது காங்கிரஸ் சின்னத்தில் நிற்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.
இதனால் டபுள் ஷாக் அடித்தது போல் கமல் மிகுந்த அப்செட்டுக்கு உள்ளாகி இருக்கிறார், என்கிறார்கள். ஏனென்றால் அவர் அதிகம் நேசிக்கும் கோவை தொகுதி கிடைக்காது என்பது வெளிப்படையாக தெரியும் நிலையில் வேறொரு நகர்ப்புற தொகுதியை தனக்கு திமுக தலைமை ஒதுக்க முன் வரலாம். ஆனால் எங்கு போட்டியிட்டாலும் நம் கூட்டணிக்குத்தான் அமோக வெற்றி என்று கூறுவதோடு திமுக அல்லது காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட தள்ளுவதுதான் அவருக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் கமல், கோவை தொகுதியில், தான் போட்டியிடுவதை உறுதி செய்ய தனக்கு மிகவும் நெருக்கமான மார்க்சிஸ்ட் தலைவரும், கேரள முதலமைச்சருமான பினராயி விஜயனின் உதவியை நாடியதாகவும், அதற்கு அவரோ இது தமிழக மார்க்சிஸ்ட் சம்பந்தப்பட்ட விவகாரம். இதில் என்னால் நேரடியாக தலையிட முடியாது, நீங்களே மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் இதை பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கிக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால் தமிழக மார்க்சிஸ்ட்டோ, திமுக தலைமை தங்களுக்கு ஒதுக்க முன் வந்துள்ள கோவை தொகுதியை நடிகர் கமலுக்கு கொடுத்துவிட்டு, அவருக்கு ஒதுக்க இருக்கும் பெரம்பலூர் தொகுதியில் தாங்கள் போட்டியிட்டால் அறிவாலயத்தின் கடும் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்று அஞ்சுகிறது. இதனால் இதுவரை கமலின் கோரிக்கையை தமிழக மார்க்சிஸ்ட் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
“நடிகர் கமல், தனது மக்கள் நீதி மய்யத்தை திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்று சபதம் எடுத்து ஒரு அரசியல் இயக்கமாகத்தான் 2018ல் தொடங்கினார். ஆனால் இன்றோ ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதிக்காக திமுக தலைமையிடம், அவர் படும் பாடு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல், தான் போட்டியிடுவதற்கு முன்னுரிமை கொடுக்கும் தொகுதிகள் கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய மூன்றும்தான். ஆனால் இதில் எதுவுமே அவர் விரும்பியது போல கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரை தூது
அனுப்பி திமுகவிடம் அவர் ரகசிய பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இது தொடர்பாக எந்த உறுதி மொழியையும் கமலுக்கு திமுக அளிக்கவில்லையாம்.
இந்த நிலையில்தான் 234 தொகுதிகளிலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் நமது கட்சியின் தொழிற்சங்கங்களை தொடங்கி கட்சியை இன்னும் பலப்படுத்துங்கள் என்று சென்னையில் கடந்த வாரம் நம்மவர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கமல் பேசியிருந்தார்.
தமிழக தொழிற்சங்கங்களில் மற்ற எல்லா கட்சிகளையும் விட மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் முன்னணியில் இருப்பவர்கள். அதற்கு இணையாக தொழிற்சங்கங்களை அமையுங்கள் என்று நடிகர் கமல் கூறுவது கோவை தொகுதியை மார்க்சிஸ்ட் தங்களுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கும் கோபத்தில்தான் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்சி தொடங்கி ஆறு வருடங்கள் ஆகப்போகும் நிலையில்தான் தனது கட்சியில் தொழிலாளர் சங்கம் மிகப் பலவீனமாக உள்ளது என்பதே கமலுக்கு தெரிய வருகிறது. இது மாட்டின் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை போன்றதாகும்.
தன்மீது என்னதான் விமர்சனம் வைக்கப்பட்டாலும் கூட மக்கள் நீதி மய்யம் திமுகவின் பக்கம் இணக்கமாக செல்வதையே கமல் விரும்புகிறார் என்பது வெளிப்படை. இதற்கான அச்சாரம் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் போதே போடப்பட்டு விட்டது.
ஆனாலும் இதெல்லாம் இனி அவருக்கு கை கொடுக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் தமிழகத்தில் காங்கிரசுக்கே ஐந்து முதல் ஏழு தொகுதிகளைத்தான் திமுக ஒதுக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கமல் வைக்கும் கோவை தொகுதி கோரிக்கையை அது ஏற்றுக்கொள்ளுமா? என்பதை உறுதியாக கூற முடியாது.
மேலும் திமுக கூட்டணியை விட்டால் தனக்கு வேறு கதியே இல்லை என்ற முடிவுக்கு கமல் எப்போதோ வந்து விட்டார். இதனால் அவருடைய கட்சி வைகோவின் மதிமுக போலவே மெல்ல மெல்ல அழிந்து போகும் வாய்ப்புகளே அதிகம். ஒருவேளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமல் வெற்றி பெற்று விட்டாலும் கூட மக்கள் நீதி மய்யம் எதற்காக தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
மதுரை தொகுதியை 2019 தேர்தலில் மார்க்சிஸ்ட்க்கு, ஒதுக்கியது போல் இம்முறை திமுக ஒதுக்காது என்று கூறப்படுவதால் நடிகர் கமல் அந்த தொகுதியை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் மதுரை மாவட்ட திமுக செயலாளர்கள் அனைவருமே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் திமுகதான் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் கமலுக்கு மதுரை தொகுதி கிடைப்பதற்கான வாய்ப்பு வெகு குறைவுதான். எனவே வேறு வழியின்றி அவர் பெரம்பலூரில் போட்டியிடும் நிலைக்குத்தான் தள்ளப்படுவார் என்பது நிச்சயம்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சினிமாவில் உலக நாயகன் என்ற உச்சத்தை அடைந்த கமலுக்கு, உள்ளூர் அரசியல் களத்தில் விலை போகாத நாயகன் என்னும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.