திருமாவளவனின் மூணு சீட் மர்மம்…? திகைப்பில் திமுக… வெல்லப்போவது யார்..?

Author: Babu Lakshmanan
29 July 2023, 8:00 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் ஒருவராக மாறி விட்டதை கடந்த ஆறு மாதங்களாகவே பார்க்க முடிகிறது.

அதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

பாமகவையும் கூட்டணிக்குள் வளைத்து போட நினைக்கும் திமுகவுக்கு செக் வைக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதலே பாமக, பாஜக இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இருக்காது என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆனால் இந்த விஷயத்தில் திருமாவளவனை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில், பாமகவுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளில் திமுக ஈடுபட்டு வருகிறது.

இதனால்தான் என்எல்சி நிறுவனம், நெற்பயிர் வளர்ந்த நிலையில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பாக பாமக நடத்திய முற்றுகை போராட்டம் பெரிய அளவில் வன்முறையாக வெடித்தும் கூட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட யார் மீதும் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் திருமாவளவனோ டெல்லியில் காங்கிரசுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் எம்பியும் சந்தித்து பேசினர்.

இதுபற்றி திருமாவளவன் நாங்கள் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டோம் என்று கூறினாலும் கூட மல்லிகார்ஜுன கார்கேயின் மிக அருகே அமர்ந்து இருந்தவர்களில் திருமாவளவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்காக திருமாவளவனும், ரவிக்குமாரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர் என்பதற்கான விடை ஜூலை 29ம் தேதி கிடைத்து விட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடச் சென்ற 20 எம்பிக்கள் அடங்கிய குழுவில் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட மூன்று பேர், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்பட 2 பேர் மற்றும் திமுகவின் சார்பில் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா,
ஆர்ஜேடி, உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆர்எல்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்எஸ்பி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் மட்டுமே இடம் பிடித்திருந்தனர். அதேநேரம் இந்த எம்பிக்கள் பட்டியலில் இரண்டாவது இடம் விசிகவுக்கு கிடைத்திருந்தது. ஏனென்றால் திருமாவளவன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் இருவருமே இந்த 20 எம்பிக்கள் பட்டியலில் இருந்தனர்.

தேசிய அளவில் மிகச் சிறிய கட்சியாக உள்ள விசிகவுக்கு இந்த கவுரவம் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு விசிக தலைவர்கள் இருவருமே மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து பேசியதுதான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படி தேசிய அளவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாரத ராஷ்டிர சமிதி, சமாஜ்வாடி என்று பல கட்சிகளுடன் நட்புறவை பேணி வரும் திருமாவளவனனுக்கு தற்போது இன்னொரு ஆசையும் வந்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அவர் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேசமயம் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி கண்டார்.

ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்ட விசிக தங்களது கட்சியின் சின்னமான பானையில் மட்டுமே களம் கண்டது. இதில் இரண்டு தனித் தொகுதிகளிலும், இரண்டு பொதுத் தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றது. இதனால் பானை சின்னத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை திருமாவளவனுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் சிதம்பரம், விழுப்புரம் தவிர திருவள்ளூர் தொகுதியையும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கோரி திமுகவிடம் விசிக முரண்டு பிடித்து வருகிறது.

மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் விசிகவின் ரவிக்குமார் எம்பி பெயர் திமுகவின் எம்பி பட்டியலில்தான் இடம் பிடித்துள்ளது. இதனால் மக்களவையில் அவர் பேசவேண்டும் என்றால் ஒவ்வொரு நேரமும் முன்கூட்டியே திமுக கொறடாவான
ஆ ராசாவின் சம்மதத்தை பெற வேண்டிய இக்கட்டான நிலை இருக்கிறது.

ஆனால் 10 பிரச்சனைகள் மீது பேச விரும்பினால் ஒன்று அல்லது இரண்டு விவகாரங்களில் மட்டும்தான் பேசுவதற்கு ரவிக்குமாருக்கு அனுமதியே கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் வகுப்பை சார்ந்த ஒருவரே தனக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற மனக்குமுறல் ரவிக்குமாரிடம் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அந்தந்த கட்சியினரே இதுபற்றி முடிவெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் வரும் தேர்தலில் மூன்று எம்பி தொகுதிகளை திமுகவிடம் போராடி பெற்று, அந்த மூன்றிலுமே பானை சின்னத்தில்தான் விசிக வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

2024 தேர்தலில் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் தான் நிறுத்தப்படுவார்கள் என்று திருமாவளவன் உறுதியாக இருப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“அதில் மிக முக்கியமானது, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி விடும் என்று திருமாவளவன் நம்புவதுதான். அப்போது திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் விசிக உறுப்பினர்கள் திமுக எம்பிக்களாகவே மக்களவையில் அங்கீகரிக்கப்படுவார்கள். இது போன்றதொரு நிலையில் ஆட்சி அமைக்கும் காங்கிரசிடம் முக்கிய அமைச்சர் பதவிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

ஏனென்றால் திமுகவின் சின்னத்தில் வெற்றி பெற்றால், அக்கட்சியின் கணக்கில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும்தான் கூடுதலாக பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். இதுமாதிரியான சூழலில் அமைச்சர் பதவிகளை வாங்குவதற்கு திமுகவிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு விசிக தள்ளப்படலாம்.

அதை தவிர்ப்பதற்காகவே பானை சின்னத்தில் விசிக வேட்பாளர்களை நிறுத்த திருமாவளவன் முடிவு செய்து இருக்கிறார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆனால் திமுகவோ 2019 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் தட்டு தடுமாறி 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்.

அதுவும் வருகிற தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். அதனால் தேவையற்ற ரிஸ்க்கை நீங்கள் எடுக்க வேண்டாம். மூன்று தொகுதிகளிலும் திமுகவின் சின்னத்திலேயே விசிக போட்டியிட்டும். அதுதான் நல்லது. என்று அறிவாலயம் அறிவுறுத்தி வருகிறது, என்கிறார்கள்.

ஆனால் திமுக தொடர்ந்து இப்படி நெருக்கடி அளிக்கிறது என்பதால்தான் வட மாவட்டங்களுக்கு 12 தேர்தல் பொறுப்பாளர்களையும் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒன்பது மாவட்டத் தலைவர்களையும் திருமாவளவன் மிக அண்மையில் நியமித்திருக்கிறார். அவர்கள் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கியும் விட்டனர். இதன் மூலம் சிதம்பரம் தொகுதியில் மட்டுமல்ல மற்ற இரண்டு இடங்களிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதை திருமாவளவன் இலக்காகவும் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

திருமாவளவன் போடும் தேர்தல் கணக்கை திமுக ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 319

    0

    0