எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் : அதிமுக எம்எல்ஏ அழைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2023, 5:51 pm
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் : அதிமுக எம்எல்ஏ அழைப்பு!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக தான் காணப்படுகிறது. கூட்டணி முடிவிற்கு பிறகு, இருதரப்பும் மவுனமாக இருந்த நிலையில், இனி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என அதிமுக திட்டவட்டமாக கூறியது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி முறிவு பாஜகவுக்கு பேரடியாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த கூட்டணி முறிவு நிரந்தரமா எனவும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், தலைவர்கள் குறித்து அண்ணாமலை பேசியதால் கூட்டணியில் இருந்து விலகியுள்ளேம், இனி பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. வரும் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். 2026ல் ஆட்சிக்கு வரவேண்டியதுதான் எங்கள் இலக்கு, இதில் எங்கிருந்து வந்தார்கள் பாஜக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இவர்களை எந்த அளவிற்கு ஏற்றுகொண்டுள்ளனர் என்று தெரிய வரும்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதிமுகவின் இந்த முடிவு குறித்து அண்ணாமலை அவர்கள், பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்றும், சரியான நேரத்தில் இது குறித்து பதில் அளிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், பாஜவுடனான கூட்டணியில் முரண்பாடு இருந்ததால், அதில் இருந்து நாங்கள் வெளியேறினோம். எடப்பாடி பழனிசாமியை கூட்டணி தலைவராகவும், முதல்வராகவும் ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.