கன்னா, பின்னா கட்டண உயர்வு!ஆம்னி பஸ்களால் அலறும் பயணிகள்!…

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 9:45 pm

பண்டிகை, திருவிழா, அரையாண்டு, கோடை விடுமுறை காலங்கள் என்றால் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்குமே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று. இதற்கு முக்கிய காரணம் உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்னும் ஆர்வ மிகுதிதான் .

பண்டிகை விடுமுறை

இதுபோன்ற நேரங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரயில்களில் குடும்பத்துடன் பயணிப்பதற்கு முன் பதிவு ‘டிக்கெட்’ கிடைத்துவிட்டால், எதையோ சாதித்து விட்டது போன்ற உற்சாகமும் பிறந்து விடுகிறது.

இப்படி முக்கிய பண்டிகைகள் கால விடுமுறையின்போது சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு 7 முதல் 9 லட்சம் பேர் வரை பயணிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்காக பொங்கல், தீபாவளியின்போது மாநிலம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கவும் செய்கின்றன. அப்படி இருந்தும் கூட முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறி பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

ஆம்னி பஸ் கட்டண உயர்வு

தவிர ஏராளமானோர் கடைசி நேரத்தில் பயணம் குறித்து முடிவு செய்வதால் அவர்களில் சுமார் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அரசு பஸ், ரயில்களில் முன் பதிவு டிக்கெட் கிடைப்பதில்லை என்பதும் உண்மை.

இதைத்தான் ஆம்னி பஸ் உரிமையாளர்களில் சிலர் பயன்படுத்திக் கொண்டு கட்டண கொள்ளை அடிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கூடுதல் கட்டணம் வசூல்

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பண்டிகை தின விடுமுறை நாட்கள் மிக அதிகமாக இருந்ததால் அதற்கு முந்தைய மாதமான செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பயண கட்டணத்தை திடீரென உயர்த்தினர்.

அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு 720 முதல் 2090 ரூபாயும், மதுரைக்கு 690 முதல்1940 ரூபாயும், திருநெல்வேலிக்கு 870 முதல் 2,530 ரூபாயும், திருச்சிக்கு 520 முதல் 1,470 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பல ஆம்னி பஸ்களில் ஒரு பயணியிடம் 500 முதல்1000 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

பொங்கலுக்கு கட்டணம் மூன்று மடங்கு உயர்வு?

இந்த நிலையில்தான் ஆம்னி பஸ் நிர்வாகிகள் வரும் பொங்கல் பண்டிகை தினங்களை கணக்குப் போட்டு மீண்டும் ஒருமுறை கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக ஒரு பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி வருகிற 30-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கோவைக்கு 2800 ரூபாய், மதுரைக்கு 2500 ரூபாய் திருநெல்வேலிக்கு 3300 ரூபாய் பெங்களூருவுக்கு 2000 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்த புகார்கள் எழும்போதெல்லாம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்தாலும் கூட
இப்பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில்தான் அண்மையில் கிறிஸ்துமஸ், விடுமுறையை யொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். மேலும் அதிக அளவில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தனர். இந்த இரண்டு நாட்களிலும் ஆம்னி பஸ்களின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுத்தாலும் தொடர்கதை

இதையடுத்து ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்திய அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 49 ஆம்னி பஸ்களுக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்தனர். மேலும் அதிக கட்டணம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தமிழக அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் இது தொடர்கதையாகவே உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், இதற்கு வேறு காரணங்களை கூறுகின்றனர்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் குமுறல்

“பண்டிகை காலங்களில் அதிகப்படியான பயணிகள் ஒரே சமயத்தில் அவரவர் ஊர்களுக்கு செல்வதாலும், இரவு நேரத்தில் இயக்குகிற ஆம்னி பஸ்கள் பகல் பொழுதில் காலியாக திரும்பி வருவதாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே 4000 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் தற்போது 2000 பஸ்கள் மட்டுமே தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

இதில் ஏசி வசதி, படுக்கை வசதி என ஏழு வகையான ஆம்னி பஸ்கள் உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை

கடந்த 2 ஆண்டுகளாக ஆம்னி பஸ் போக்குவரத்து மோசமான சூழலில் உள்ளது. மேலும் வரி, இன்சூரன்ஸ், ஜிஎஸ்டி, சுங்க வரி, டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல கடுமையான சூழலில் தவித்து வருகிறோம்.

இந்த தொழிலை நம்பி தமிழகத்தில் ஏறத்தாழ 3 லட்சம் குடும்பங்கள் உள்ளன. கூடுதல் கட்டணம் வசூல் என்கிற தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள்தான் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால், ஒட்டுமொத்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் பயணிகளிடம் அவப்பெயர் ஏற்படுகிறது.

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை

ஆன்லைன் மூலமாக சீட் விற்பனை செய்வதில் சிலர் கூடுதல் கட்டணம் வாங்குகின்றனர். தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து துறைக்கு அவ்வப்போது புகாரும் தெரிவித்து வருகிறோம்.

அனைத்து வழித்தடங்களுக்கும் உண்டான கட்டண விவரம் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் இணையதளத்தில் உள்ளது. ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பஸ்களுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பஸ்களுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை” என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.

சமூக நல ஆர்வலர்களும், பண்டிகை நேரங்களில் தவிர்க்க முடியாமல் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோரும் வைக்கும் வாதம் இது.

செயற்கையான தட்டுப்பாடு

“தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளின் போதும் அரையாண்டு, கோடை விடுமுறை காலத்திலும் ஆம்னி பஸ் உரிமையாளர்களில் பலர், அதை துல்லியமாக கணக்கிட்டு முன்பாகவே தங்களது இணைய தளங்களில் முன்பதிவு முடிந்து விட்டதாக கூறி திட்டமிட்டு அதற்கு தடை போட்டும் விடுகின்றனர்.

பண்டிகை நேரத்தில் கூட்டம் அலைமோதும்போது போலியான பெயர்களில் தாங்கள் முன் பதிவு செய்த சீட்களை அவசர கதியில் வரும் பயணிகளுக்கு விற்று கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்வதும் அவர்களின் வாடிக்கையாக உள்ளது. அதாவது செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக பணம் சம்பாதிக்கின்றனர்.
இதற்காகவே ஏராளமான இடைத்தரகர்களும் செயல்படுகின்றனர்.

இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் புகார் வந்தால் மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அரசியல் பின்புலம்

எனவே முக்கிய பண்டிகை காலங்களில் அரசு அதிகாரிகள் புகார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி ஆம்னி பஸ்களில் பயணிப்பவர்களிடம் கூடுதலாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரித்து அறிய வேண்டும். இதை செய்யாவிட்டால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது.

ஆனால் இப்படி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஏனென்றால் முக்கிய வழித்தடங்களில் ஆம்னி பஸ்களை இயக்குபவர்களில் பலர் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பஸ்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.

இதனால்தான் பண்டிகை காலங்களில் மிக அதிகமாக சம்பாதித்து, கூட்டம் இல்லாத நாட்களில் ஏற்படும் ஓரளவு வருமான இழப்பை ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சாதுர்யமாக தவிர்த்தும் விடுகின்றனர்.

தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா?

வருடத்தில் ஒரு முறை இரு முறை அல்ல,15க்கும் மேற்பட்ட சமயங்களில் இதுபோன்ற கட்டண கொள்ளை நடக்கிறது. இதுபற்றி காரசார விவாதங்கள் அச்சு, காட்சி ஊடகங்களில் அந்தந்த நேரங்களில் நடத்தப்பட்டாலும் அடுத்த சில நாட்களில் அந்த பரபரப்பு அப்படியே அமுங்கி, மறைந்து போய்விடுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்கள் போல ஆம்னி பஸ்கள் சேவை நோக்குடன் நடத்தப்படுவதில்லை என்பது உண்மை என்றாலும் கூட மூன்று மடங்கு, நான்கு மடங்கு
கூடுதல் கட்டணம் என்பதை ஏற்க இயலாது. அதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. வரும் பொங்கல் பண்டிகையின் போதாவது இந்த விவகாரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ளவேண்டும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்களும், ஆம்னி பஸ் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 457

    0

    0